திமுகவினர் என்றால் ஏவல்துறை; அப்பாவிகள் என்றால் அராஜகத் துறை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை: மக்களைக் காக்க வேண்டிய போலீசார், திமுகவினர் குற்றம் புரியும் போது ஏவல்துறையாகவும், அப்பாவிகள் அகப்படும்போது அராஜகத் துறையாகவும் மாறுவது ஏன்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: நெல்லை மாவட்ட போலீசாரால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 217 பேர் கை கால்களில் காயமுற்று மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று ஆட்சி அமைக்கும் முன் வீர வசனம் பேசிவிட்டு, ஆட்சி அரியணை ஏறியதும் குற்றங்கள் நிகழாது தடுப்பதைவிட்டு, குற்றம் புரிந்ததாக சந்தேகப்படும் நபர்களை அடித்து அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?
கடந்த 2023ம் ஆண்டில் குற்றவாளிகளின் பற்களை உடைத்ததால் நெல்லை ஏ.எஸ்.பி., பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்பும், இன்றுவரை நெல்லை போலீசார் பாடம் கற்றுக்கொள்ளாதது ஏன்? மக்களைக் காக்க வேண்டிய போலீசார், திமுகவினர் குற்றம் புரியும் போது ஏவல்துறையாகவும், அப்பாவிகள் அகப்படும்போது அராஜகத் துறையாகவும் மாறுவது ஏன்?
இப்படித் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் குரூரப்போக்குடன் செயல்படும் போலீசாரால் மேலும் பல அப்பாவி அஜித்குமார்கள் பலியாக நேரிடுமே தவிர, பொதுமக்களின் பாதுகாப்பு என்றும் மேம்படாது என்பதை சட்டம் ஒழுங்கை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இனியாவது உணர்ந்து கொள்ளவேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.









