சுப்மனுக்கு நல்வழி காட்டும் ரோகித்: ஏற்றம் தருமா கேப்டன் மாற்றம்

மும்பை: இந்திய அணி ஒருநாள் போட்டி அரங்கிலும் மாற்றத்தை நோக்கி நகர்கிறது. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா, இளம் சுப்மன் கில்லுக்கு வழிகாட்ட உள்ளார்.


ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் 26, நியமிக்கப்பட்டார். முந்தைய கேப்டன் ரோகித் சர்மா 38, சீனியர் கோலி 36, இடம் பெற்றுள்ளனர். 2027ல் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு சுப்மன் வசம் தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெஸ்ட், 'டி-20' அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித், கோலிக்கு ஆஸ்திரேலிய தொடர் சவாலானது. இதில் சோபிக்க தவறினால், உலக கோப்பை தொடரில் வாய்ப்பு பெறுவது கடினம்.

'சூப்பர்' கேப்டன்: ஒருநாள் அரங்கில் இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக திகழ்ந்தார் ரோகித் சர்மா. 2021ல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 56 போட்டிகளில் 42 வெற்றி, 12 தோல்வியை சந்தித்தார். ஒரு போட்டி டை, ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இவரது வெற்றி சதவீதம் 75. ஐ.சி.சி., தொடர்களிலும் அசத்தினார். ஆசிய கோப்பையை 2018 (தற்காலிக கேப்டன்), 2023ல் வென்றார். 2023ல் உலக கோப்பை (50 ஓவர்) பைனலுக்கு அழைத்துச் சென்றார். 2024ல் 'டி-20' உலக கோப்பை, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றார்.


சிறந்த துவக்க ஜோடி: இப்படி கோப்பை மேல் கோப்பை வென்ற போதும், கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ரோகித்துக்கு புதிதல்ல. பிரிமியர் தொடரில் மும்பை அணிக்கு 5 கோப்பை வென்று தந்தார். ஆனாலும், 2024ல் இவரை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தனர். இதற்கு மும்பை ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். ரோகித் சர்மா வீரராக தொடர்ந்தார். பாண்ட்யாவுக்கு பக்கபலமாக இருந்தார். இதே போல சுப்மனுக்கும் வழிகாட்டுவார். ரிஷாப் பன்ட் அதிரடியாக விளையாட சுதந்திரம் அளித்தவர் ரோகித். 2024, 'டி-20' உலக கோப்பையில் கூடுதல் 'ஸ்பின்னராக' அக்சர் படேலை களமிறக்கினார். இவர் பேட்டிங்கிலும் அசத்த, இந்தியாவின் கோப்பை கனவு நனவானது. இது போன்ற விஷயங்களை ரோகித்திடம் இருந்து சுப்மன் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருநாள் போட்டிகளில் துவக்க ஜோடியாக ரோகித்-சுப்மன் சேர்ந்து 32 இன்னிங்சில் 2124 ரன் (சராசரி 68.51) எடுத்துள்ளனர். இவர்களது விளாசல் ஆஸ்திரேலியாவிலும் தொடரலாம்.


ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில்,''டெஸ்ட் கேப்டனாக திறமை நிரூபித்துள்ளார் சுப்மன் கில். ஒருநாள் போட்டிகளிலும் அசத்துவார். ரோகித், கோலி இடம் பெற்றிருப்பது இவருக்கு சாதகம். அணியை வழிநடத்துவது பற்றி இவர்களிடம் இருந்து தேவையான ஆலோசனைகளை பெறலாம்,''என்றார்.

அவசரம் ஏன்...

இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறுகையில்,''ரோகித் விஷயத்தில் ஏன் இவ்வளவு அவசரம்? இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுகிறார். கேப்டனாக ஐ.சி,சி., தொடர்களில் அசத்தியுள்ளார். 2027, உலக கோப்பை தொடரில் கேப்டனாக இருக்கும் வாய்ப்பை இவருக்கு வழங்கவில்லை,''என்றார்.

Advertisement