அரியமான் கடற்கரையில் தேசிய அளவில் நீர் சாகச போட்டிகள்

ராமநாதபுரம் : தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான நீர் சாகச போட்டிகள் ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா அரியமான் கடற்கரையில் தமிழக சுற்றுலாத்துறை, சர்பிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நீர் சாகச விளையாட்டு போட்டிகள் அக்.,3ல் தொடங்கி 5 வரை நடந்தது. இப்போட்டிகளில் கேரளா, ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் இருந்து 240 பேர் பங்கேற்றனர்.

நின்று கொண்டு படகு ஓட்டுவது, துடுப்பு வைத்து கொண்டு ஓட்டுவது, கடலில் நீச்சல் அடிப்பது உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. சப் ஜூனியர், ஜூனியர் , சீனியர் பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டிகளை காண வந்த சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற 57 பேருக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை கேப்டன் அர்ஜூன் மேனன் பரிசுகளை வழங்கினர்.

சுற்றுலா அலுவலர் அபராஜிதன், சுற்றுலா காப்பாளர் லோகன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement