அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

4


வாஷிங்டன்: அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன், 51, உணவகத்துக்கு வெளியே நடந்த சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.


அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் என்பவர் உணவு கடை நடத்தி வந்தார். இவரது உணவகத்துக்கு வெளியே, திடீரென இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது சண்டையை மாறியது. அப்போது சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது, ராகேஷ் ஏகபன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


துப்பாக்கிச்சூடு நடத்தியவன் 37 வயதான ஸ்டான்லி யூஜின் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கொலையாளியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த மோதல் உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது என போலீசார் தெரிவித்தனர். இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.



சில தினங்களுக்கு முன், டல்லாஸ் நகரில் மர்ம நபரால் ஹைதராபாத்தைச் சேர்ந்த பல் டாக்டர் சந்திரசேகர் போலே, 27, சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவில் தொடர்ந்து இந்தியர்கள் கொல்லப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement