பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து ஒரே மாதத்தில் 357 வழக்குகள் பதிவு

மேட்டுப்பாளையம்;கோவை புறநகரில் பொது இடங்களில் மது அருந்துவதை தவிர்க்க, 278 இடங்கள் கண்டறியப்பட்டு, போலீசார் அங்கு தீவிர ரோந்து செல்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுதொடர்பாக 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோவை புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில், பொது இடங்களில் மது அருந்துவதால் ஏற்படும் பிரச்னைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பொது இடத்தில் தகராறு ஏற்படுவதும், உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டன. கடந்த ஜூலை மாதம் சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட வாய்த்தகராறில் மதுரையை சேர்ந்த சுரேஷ் குமார், 28, என்பவர் தனது நண்பர்களால் கொலை செய்யப்பட்டார். இதே போன்று மற்றொரு சம்பவத்தில், எட்டிமடை அருகே அனந்தகுமார், 27, கொலை செய்யப்பட்டார்.

கோவை புறநகர் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால், கோவை ரூரல் போலீசார், பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில், ஒரு சிறப்பு ரோந்து முறையைத் கடந்த ஜூலை மாதம் முதல் துவக்கி செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் அறிவுறுத்தல் படி, கோவை புறநகர் பகுதிகளில் 278 இடங்களும், மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் 48 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி அன்னூரில் 16 இடங்கள், மேட்டுப்பாளையத்தில் 14 இடங்கள், காரமடையில் 8 இடங்கள், சிறுமுகையில் 10 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதிகளில் போலீசார் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் தீவிர ரோந்து செல்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

இந்த தொடர் ரோந்து காரணமாக கடந்த மூன்று மாதங்களில் மது தொடர்பான குற்றங்கள் குறைந்துள்ளன. பொது இடங்களில் மது அருந்தி தொந்தரவு செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள், பார்கள் அருகே உள்ள பகுதிகளில் தொடர்ந்து ரோந்து செல்கிறோம். ஸ்மார்ட் காக்கீஸ் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

பொது இடங்களில் மது அருந்துதல் தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100 அல்லது அந்தந்த பகுதிகளில் புகாரளிக்க பொதுமக்களுக்கு தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை ரூரல் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 357 வழக்குகள் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement