அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு கைரேகையால் சிக்கிய திருடர்கள்

பெருங்களத்துார், அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.

முடிச்சூர், அமுதம் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ், 33. தனியார் நிறுவன ஊழியர். கடந்த 29ம் தேதி, இவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 சவரன் நகை, ஒரு மொபைல் போன், ஒரு மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தது.

அதேபோல், முடிச்சூர், துர்கா அவென்யூவை சேர்ந்த இந்திரன், 40, என்பவரின் வீட்டிலும், அதே நாள் முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த மூன்றரை சவரன் நகை, 60,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.

புகாரின்படி, பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து, தடயவியல் நிபுணர்கள் மூலம் கைரேகையை சேகரித்து விசாரித்ததில், பகலில் மட்டும் ஷேர் ஆட்டோவில் சென்று திருடும், பழைய குற்றவாளியான கிண்டியை சேர்ந்த அரவிந்த்குமார், 42, என்பவரின் கைரேகை என்பது தெரிந்தது.

இதையடுத்து, அரவிந்த்குமாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியான குன்றத்துாரை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்கிற அண்ணாச்சி, 39, என்பவரும் கைது செய்யப்பட்டார்.

குற்றவாளிகளிடம் இருந்து, தங்க நகை, வெள்ளி பொருட்கள், மடிக்கணினி, மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement