தொட்டியில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு கொடுங்கையூரில் அதிர்ச்சி
கொடுங்கையூர், கழிவு நீர் தொட்டியில், ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், கொடுங்கையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர் 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபிக், 48. இவர், வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று இவரது வீட்டில் உள்ள கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரை அடுத்து, கழிவுநீரேற்று வாரிய ஊழியர்கள், கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர் 3வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தனர்.
அதில், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் உடல் இருந்தது. இது குறித்து தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையின் உடலை, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். மேலும், குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால், கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம், கொடுங்கையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.