நெடுஞ்சாலை சந்திப்புகளில் பாதுகாப்பு: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம்; மாவட்டத்தில், முக்கிய நெடுஞ்சாலை பகுதிகளில், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்பு ரம் அருகே செஞ்சி நெடுஞ்சாலை, பூத்தமேடு துணை மின் நிலையம் சந்திப்பு பகுதியிலும், தொடர்ந்து அசோகபுரி, நந்திவாடி, அண்ணாநகர் ஆகிய பகுதியிலும் சாலை பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் உயர் அதிகாரிகள் குழுவினருடன் நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, செஞ்சி தாலுகா ஒட்டம்பட்டு, கவரை, சிட்டாம்பூண்டி, நரசிங்கராயன்பேட்டை, ரெட்டிப்பளையம், வல்லம் ஆகிய பகுதிகளிலும், திண்டிவனம் அருகே தீவனுார், கொள்ளார், இருதயபுரம் பகுதிகளிலும் சாலை பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இணையும் இடத்தில், விபத்து ஏற்படாத வகையில், வேகத்தடைகள் மற்றும் தெரு மின் விளக்குகள் அமைக்கவும் மற்றும் அவைகள் தொலைவில் இருந்தே தெரியும் வகையில், தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைந்திடவும் துறை சார்ந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து சாலைகளிலும் தகவல் பலகை, பார்க்கிங் குறித்த பலகைகள் தேவையான இடங்களில் அமைக்கவும், முக்கிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலைகளில் மேம்படுத்திடவும், தேவையான இடங்களில் ஆய்வு செய்து உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்திடவும் நெடுஞ்சாலை திசைகாட்டும் பலகைகளை 50 மீட்டருக்கு முன்னரே நிறுவுவதற்கும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, எஸ்.பி., சரவணன், கூடுதல் எஸ்.பி., ரவீந்தரகுமார் குப்தா, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ஹேமலதா, உதவி கோட்ட பொறியாளர்கள் தன்ராஜ், அக்பர், கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் அரு ணாச்சலம், உதவி பொறியாளர் ராதிகா, தாசில்தார்கள் செல்வமூர்த்தி, யுவராஜ், துரைசெல்வம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement