அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டை: அமைதி காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை அதிகரித்து வரும் நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் அமைதி காப்பதாக புகார் எழுந்துள்ளது.
பண்டிகை காலங்களில், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை, ஒப்பந்ததாரர்கள், அரசியல் பிரமுகர்கள் வழக்கமாக வைத்துஉள்ளனர்.
அத்துடன் தங்களிடம் வரும் பொதுமக்களிடம், பண்டிகை கால செலவிற்கு லஞ்சம் பெறுவதையும், சில துறை அதிகாரிகள் வாடிக்கையாக வைத்துஉள்ளனர்.
தீபாவளி பண்டிகை, வரும், 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான வசூல், அரசு அலுவலகங்களில் களைகட்டி வருகிறது.
களைகட்டியுள்ளன நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நீர்வளம் உள்ளிட்ட பல துறைகள் வாயிலாக, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சமீபத்தில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர பல பணிகளுக்கு ஒப்பந்ததாரர் தேர்வும் நடக்க உள்ளது.
இதையடுத்து, தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கவனிக்கும் பணிகளை ஒப்பந்ததாரர்கள் துவக்கி உள்ளனர்.
இதனால், தலைமை செயலகம், எழிலகம், நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் அரசு அலுவலகங்கள் களைகட்டி வருகின்றன.
பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அலுவலகங்களிலும், ஒப்பந்த நிறுவனங்கள், அரசியல்வாதிகள் கவனிப்பால், அதிகாரிகள் உச்சி குளிர்ந்து வருகின்றனர்.
பண்டிகை கால பொருட்கள் நடமாட்டம், தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகளில் அதிகரித்து உள்ளது.
அங்குள்ள சோதனை சாவடிகளில் வணிகவரி துறையினர் மற்றும் சோதனைச் சாவடி போலீசாரின் வசூல் வேட்டை களைகட்டி வருகிறது. தங்கள் பங்கிற்கு போக்குவரத்து போலீசாரும் வாகனங்களை மடக்கி கைநீட்டி வருகின்றனர்.
இனிப்பு, காரம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, சாக்லெட், உடைகள், பணம், பரிசுப் பொருட்கள் என, விதவிதமாக வசூல்களை கட்டுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக, பட்டா, நிலம் மாற்றம், புதிய சிறுதொழில் நிறுவனங்கள், வீட்டு மின் இணைப்பு என, வருவாய் மற்றும் மின்வாரியம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மவுனம் இதில் காரியம் சாதிக்கவும், துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை, பொதுமக்கள் அணுக துவங்கி உள்ளனர். அவர்களிடம் கோரிக்கையின் தன்மைக்கேற்ப, வசூல் வேட்டை நடந்து வருகிறது.
இதுபோன்ற பண்டிகை காலங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஆங்காங்கே அரசு அலுவலகங்களில் சோதனை நடத்துவர். இந்த ஆண்டு சோதனை நடத்தாமல், மவுனம் காக்கின்றனர்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், லஞ்சம் தொடர்பான பிரச்னைகள் வெளியே தெரியாமல் இருக்க, லஞ்ச ஒழிப்பு துறையினர் அடக்கி வாசித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், அன்பளிப்பு, பரிசு பொருட்கள் என்ற பெயரில், லஞ்ச வேட்டை நடக்கிறது.
இதை கண்காணிக்க, லஞ்ச ஒழிப்பு துறையில் உளவு போலீசார் உள்ளனர். அவர்களுக்கு லஞ்ச வேட்டை நடப்பது தெரியும்.
ஆனால், அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் உள்ளனர். அத்துடன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் வசூல் வேட்டை நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



மேலும்
-
கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்
-
லயன்ஸ் சங்கங்களின் தீபாவளிப் பகிர்வு விழா
-
பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் பஸ் ஸ்டாப்
-
மழை இல்லாததால் ராமநாதபுரம் உப்பளங்களில் உற்பத்தி அதிகரிப்பு: ; தொடரும் வெயிலால் மலைபோல் உப்பு குவிப்பு
-
பிடிபட்ட 10 அடி மலைப்பாம்பு
-
பைக் வாங்க ஆசை; சங்கிலி பறித்தவர் கைது