ஜல்லிக்கட்டு, முத்தலாக் வழக்குகளில் தீர்ப்பை வழங்கிய அஜய் ரஸ்தோகி!

2

புதுடில்லி; கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தமது பதவிக் காலத்தில் 158 தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.

செப்.27ம் தேதி கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

அதே நேரத்தில், சிபிஐ விசாரணை கோரி தவெக தரப்பு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜஸ் ரஸ்தோகி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

3 பேர் கொண்ட இந்த புலனாய்வுக்குழுவில் அஜய் ரஸ்தோகியை தவிர, 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளும் தமிழக கேடர் அதிகாரிகளாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஐஜி ரேங்க் அந்தஸ்துக்கு கீழே உள்ள அதிகாரிகளை நியமிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த இரு ஐபிஎஸ் அதிகாரிகளையும் விசாரணையை மேற்பார்வையிடும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் கூறி உள்ளது.

தமிழக அளவில் மட்டும் அல்லாமல் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த கரூர் நிகழ்வின் விசாரணையை மேற்பார்வையிடும் அஜய் ரஸ்தோகி, சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் 158 தீர்ப்புகளை வழங்கியவர்.

அவரை பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்;

1958ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி ஜெய்பூரில் பிறந்தவர். இவரின் தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகி ராஜஸ்தானில் சிவில் வக்கீலாக பணியாற்றியவர். தந்தையை போன்று தாமும் வக்கீலாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிகாம், எல்எல்பி படித்தார். 1982ம் ஆண்டு அரசியலமைப்பு, சேவை சட்டத்தில் நிபுணத்துவம் பெற்று நீதித்துறையில் தமது வாழ்க்கையை தொடங்கியவர்.

1990ம் ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட் ஆலோசகராக இருந்து, 2004ம் ஆண்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநில சட்ட சேவைகள் ஆணைய நிர்வாக தலைவராக இருந்தார்.

பின்னர் 2018ம் ஆண்டு திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியில் சேர்ந்தார். 2018ம் ஆண்டு நவ.2ல் சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் தமது பதவி காலத்தில் மட்டும் 6 அரசியல் சாசன அமர்வுகள் உள்பட கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட அமர்வில் வழக்கு விசாரணைகளை நடத்தியவர். 158 வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.

ஜல்லிக்கட்டு வழக்கு, முத்தலாக், கருணைக் கொலை உரிமைக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கியவர். மேலும் ஐஏஎஸ் தேர்வுக்கான வயதுவரம்பை நீக்க முடியாது, கடற்படையில் மகளிருக்கு நிரந்தர பணி, அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கலாம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை அளித்தவர்.

மேலும் தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் தேர்வுக்குழுக்கான வழிமுறைகளை மாற்றியமைப்பது குறித்த வழக்கில் 5 நீதிபதிகளில் ஒருவராக பணியாற்றியவர் அஜஸ் ரஸ்தோகி. அகில இந்திய தலைமை தேர்தல் கமிஷரை பார்லிமெண்டில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றிய பின்னரே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையையும் வழங்கியவரும் இவரே.

பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய அஜய் ரஸ்தோகி கரூர் சம்பவத்தை விசாரிக்கும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உள்ளார். எனவே, இந்த வழக்கு மற்றும் இனி தொடங்க போகும் விசாரணை மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது.

Advertisement