'பட்ஜெட் நிதியை செலவு செய்வதில் அதிகாரிகளுக்கு அலட்சியம் கூடாது'

சென்னை: ''அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள நிதியில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் செலவு செய்யலாம் என்ற எண்ணத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும்,'' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் நடந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில், அவர் பேசியதாவது:
நெடுஞ்சாலை துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில், 17,709 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை, எந்த விதத்திலும் அரசுக்கு திருப்பி அனுப்பாத வகையில், பணிகள் அனைத்தும் விரைவாக மு டிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில், 100 சதவீதம் செலவு செய்யவில்லை.
இந்த ஆண்டு முழுமையாக செலவு செய்து விட்டு, நிதி இல்லை என்று கேட்டால் தவறு இல்லை. நெடுஞ்சாலை துறையில் நிலுவை பணிகளில் மதிப்பு, 26,305 கோடி ரூபாய். நடப்பாண்டில், 13,667 கோடி ரூபாய் அளவிற்கு புதிய பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது; 40 ஆயிரம் கோடி ரூபாய் பணிகள் செயலாக்கத்தில் உள்ளன.
மொத்த செலவினத்தையும், 2026 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் மேற்கொள்ளலாம் என்ற எண்ணத்தை, அதிகாரிகள் கைவிட வேண்டும்; திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இம்மாதம் முதல் ஒவ்வொரு மாதமும், 20 சதவீதம் குறைவில்லாமல் செலவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்காக, அனைத்து தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள் இலக்கு நிர்ணயித்து செயலாற்ற வேண்டும். கண்காணிப்பு பொறியாளர்கள், 20 சதவீதம் செலவு செய்யப்படுகிறதா என்பதை, கண்காணிக்க வேண்டும்.
பள்ளம் இல்லாத சாலைகளை உருவாக்கும் விதமாக, 'நம்ம சாலை' என்ற செயலியை, நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியது. இதன் வாயிலாக பெறப்படும் புகார்கள், ஏழு நாட்களில் சரி செய்யப்படுகின்றன.
இந்த செயலியை, அனைத்து மாநகராட்சிகள், ஊரக வளர்ச்சி துறை சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளிலும் விரிவுப்படுத்த, அரசு முடிவெடுத்துள்ளது. விரைவில், நம்ம சாலை செயலி புதிய வடிவத்துடன், முதல்வரால் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
அடுத்த மூன்று மாதங்கள் பருவ மழை காலம். எனவே, பொறியாளர்கள், சாலை பணியாளர்களை பயன்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ள தடுப்பு பணிகள் விடுப்பட்டு இருந்தால், பருவ மழை துவங்கும் முன் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.

மேலும்
-
சில நாடுகள் சர்வதேச விதிகளை மீறுகின்றன: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
-
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
-
அழகான பெண் பிரதமர் மெலோனி; காசா அமைதி உச்சி மாநாட்டில் டிரம்ப் வர்ணிப்பு
-
முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நன்றி சொன்னதாக திருமா பேட்டி
-
மக்களுக்கு தோளோடு தோளாக துணை நிற்பது 'தினமலர்'
-
மலேசியாவில் மாணவர்கள் 6 ஆயிரம் பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல்; பள்ளிகள் மூடல்