2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 'பாலோ-ஆன்' பெற்றது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 121 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி, நான்காவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 63/1 ரன் எடுத்திருந்தது.



ராகுல் (25), சுதர்சன் (30) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சாய் சுதர்சன் 39 ரன்னில், சேஸ் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த சுப்மன் கில் 13 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். வாரிகன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ராகுல், டெஸ்ட் அரங்கில் 20 வது அரைசதம் கடந்தார்.


மீண்டும் வாரிகன் பந்தில் ராகுல் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 124/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ராகுல் (58), துருவ் ஜுரெல் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி, கோப்பை வசப்படுத்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி தொடர்ந்து 10வது முறையாக வெற்றி பெற்றது.

Advertisement