'தினமலர்' நாளிதழோடு தான் கண்விழிக்கிறேன்

நவீன உலகின் முக்கியமான அற்புதங்களில் ஒன்று பத்திரிகை.

'பொதுமக்களின் அபிப்பிராயத்தை தெளிவாக அறிந்து, அதை வெளிப்படுத்துவது; மக்கள் மனங்களில் விரும்பத்தக்க நல்லுணர்வுகளை வளர்ப்பது; மக்களின் குறைகளை எந்த அச்சமும் இன்றி பகிரங்கப்படுத்துவது ஆகிய மூன்றும், பத்திரிகைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்' என்றார், அண்ணல் காந்தியடிகள். இந்த மேலான நோக்கங்களை மிக சிறப்பாக வெளிபடுத்தி, 'தினமலர்' நாளிதழ் தனித்துவத்துடன் இயங்கி வருகிறது.

மக்களின் ஆரோக்கியமான எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, பத்திரிகைக்கு உரிய பொறுப்புணர்வில் இருந்து, சற்றும் விலகிவிடாமல், பொது சேவை நோக்கத்துடன், உயர்ந்த தரத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்பதுதான், 'தினமலர்' நாளிதழை நிறுவிய டி.வி.ராமசுப்பையரின் உயரிய எண்ணமாக இருந்தது. 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்து நடக்கும் 'தினமலர்' இன்றுவரை, ராமசுப்பையரின் நோக்கத்தில் இருந்து பிறழாமல் செயல்பட்டு வருகிறது.

மஞ்சள் செய்திகள், பழிவாங்கும் விமர்சனங்கள், பரபரப்புக்காக செய்தி தயாரித்தல், பாரபட்சம் காட்டுதல், நாகரிகமற்ற நரகல் நடை, சமூகப் பொறுப்பற்ற தன்மை, அவதுாறு, ஆபாசம், தனிநபர் தாக்குதல் போன்ற, சமூக ஆரோக்கியத்தை அரித்தெடுக்கும் தீமைகளில் இருந்து விலகி நிற்கும் பத்திரிகை, 'தினமலர்' என்பது மறுக்க முடியாத உண்மை.

நாகரிகம் வளர வளர, மனித இனம் செய்யும் குற்றங்களும், பாவங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். மாறிவரும் கலாசாரத்தில் மூச்சு திணறும் இன்றைய சமூக சூழலில், பல்வேறு பிரச்னைகள் பெருகிவிட்டன. அவை குறித்து சரியான செய்திகளையும், அவற்றுக்கான முறையான தீர்வுகளையும், பத்திரிகைகளால் தான் வழங்க முடியும். துல்லியமாகவும், முழுமையாகவும், விருப்பு, வெறுப்புக்கு இடமில்லாமல் செய்திகளை வெளியிடுவதில், 'தினமலர்' தனிக்கவனம் செலுத்துவதை, நான் தொடர்ந்து கவனித்து வியந்திருக்கிறேன்.

நல்ல பத்திரிகைகளால் செதுக்கப்படும் சமூகம், நாகரிக உலகத்தின் உச்சத்தில் போய் உட்காரும். அதனால்தான் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை உருவாக்கிய தாமஸ் ஜெபர்சன், 'பத்திரிகைகள் இல்லாத அரசாங்கம் தேவையா, அரசாங்கம் இல்லாத பத்திரிகைகள் தேவையா என்று என்னை முடிவு எடுக்க சொன்னால், நான், அரசாங்கம் இல்லாத பத்திரிகைகளே போதும் என்பேன்' என்றார்.

தேசத்தையும், தெய்வீகத்தையும் இரு விழிகளாகப் போற்ற வேண்டும் என்பதற்காகவே, 'தினமலர்' நாளிதழை உருவாக்கிய மாமனிதர் ராமசுப்பையர்.

அன்று முதல் இன்று வரை, தேச நலனை முன்னிறுத்தி, செய்திகளை வெளியிடுவதுடன்; 'இது உங்கள் இடம்' என்ற தலைப்பில் மக்களின் கருத்துகளையும் வெளியிட்டு வரும் தனித்துவம் மிக்க 'தினமலர் நாளிதழ், சாதாரண மக்களும் பொருளியல் சார்ந்த அறிவைப் பெறுவதற்காகவும், தொழில் முனைவோர் தொழில் சார்ந்த பயனுள்ள செய்திகளை அறிந்து கொள்வதற்காகவும், ஓர் ஆங்கில பத்திரிகைக்கு நிகராக, தேர்ந்த செய்திகளை வெளியிடுவதை வாசிக்கும் போதெல்லாம், நான் பெரு வியப்பு அடைகிறேன். என்னளவில் ஒவ்வொரு நாள் காலையிலும் 'தினமலர்' நாளிதழோடு தான் கண் விழிக்கிறேன்.

இப்படிக்கு,
தமிழருவி மணியன்,
தலைவர், காமராஜர் மக்கள் கட்சி

Advertisement