தொழிலாளி சாவில் சந்தேகம் உடலை சேலம் கொண்டு செல்ல உறவினர்கள் எதிர்ப்பு



ஏற்காடு, தொழிலாளி சாவில் சந்தேகம் உள்ள நிலையில், அவரது உடலை, சேலம் கொண்டு செல்ல உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஏற்காடு, கொம்மக்காடு மலைக்கிராமத்தை சேர்ந்த, குழந்தை மகன் இளையராஜா, 27. கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி பிரியா, ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இளையராஜா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி, ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால் நேற்று, இளையராஜா இறப்பில் சந்தேகம் உள்ளதால், ஏற்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என கூறி, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர். இறந்தவரின் உறவினர்கள், 'இங்கு பிரேத பரிசோதனை கூடம் இருக்கும்போது எதற்கு சேலம் எடுத்து செல்ல வேண்டும்' என கேட்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின் போலீசார், 'இறப்பில் சந்தேகம் உள்ளதால் சேலத்தில் தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும்' என தெரிவித்தனர். பின் இளையராஜாவின் உறவினர்கள் அமைதி அடைய, உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் போலீசார், வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'முதல்கட்ட விசாரணையில், இளையராஜா மதுவுக்கு அடிமையானதால், அவரது மனைவி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இளையராஜா அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் இளையராஜா அடிக்கடி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின் முழு விபரம் தெரியும்'
என்றனர்.

Advertisement