அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள குறுவை பருவ நெற்பயிர்கள், சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில், குறுவை பருவத்தில், 1.99 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு, 1.65 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும், ஒரத்தநாடு, தஞ்சாவூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், பரவலாக பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள குறுவை பருவ நெற்பயிர்கள் சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. 1,500 ஏக்கரில், குறுவை பருவ நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும், தொடர் மழையால், மகசூல் இழப்பு அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனடியாக விற்க வாய்ப்பு இல்லாததால், அறுவடை பணியை விவசாயிகள் ஒத்தி வைத்தனர். தற்போது, மழை பெய்ததால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. இதை இனிமேல் அறுவடை செய்தாலும், விவசாயிகளுக்கு நஷ்டம் தான்.
தண்ணீர் வடிந்த பிறகு தான், வயலில் சாய்ந்து கிடக்கும் பயிரை அறுவடை செய்ய முடியும். நிலம் ஈரமாக இருக்கும்போது, அறுவடை இயந்திரத்துக்கான வாடகை அதிகமாக கொடுக்கும் நிலை ஏற்படும். மகசூல் இழப்பு அதிகமாகும்போது விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.





மேலும்
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மாலை உபரி நீர் திறப்பு
-
நாடு முழுவதும் தீபாவளி குதுாகலகமாக கொண்டாடப்பட்டது
-
இந்தியா - இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும்; பிரதமர் நெதன்யாகுவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
கல்வியில் சிறந்த அல்ல... சீரழிந்த தமிழகம்: அன்புமணி குற்றச்சாட்டு
-
இன்று 8 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்; அதிக கனமழை பெய்ய வாய்ப்பு!
-
காலம் தந்த நன்கொடை 'தினமலர்' நாளிதழ்