கல்வியில் சிறந்த அல்ல... சீரழிந்த தமிழகம்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை; கல்வியில் சிறந்த தமிழகம் அல்ல, கல்வியில் சீரழிந்த தமிழகம் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான தமிழக அரசு விடுத்த அறிவிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசு, கடந்த 2ம் தேதி மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிட்டது. இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களும், ஏற்கனவே கட்டணப் பிரிவில் சேர்ந்த மாணவர்களும் இதன்படி விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.
தற்போது நர்சரி பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட 20 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான கட்டணத்தை அரசால் செலுத்த முடியாது. அதேநேரத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 18,600 இடங்களில் சேர மாணவர்கள் இல்லை.
அதனால் அந்த இடங்களுக்குரிய பணம் தமிழக அரசிடம் உபரியாக இருக்கும். எனினும், அதை கல்விப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதற்குத் தான் திமுக அரசு ஆசைப்பட்டதா?
திமுக அரசு அதன் தவறான கொள்கைகளால் தான் தமிழகத்தில் பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி ஆகிய இரண்டையும் சீரழித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தமிழகம், கல்வியில் சிறந்த அல்ல, மாறாக சீரழித்த தமிழகம்.
இவ்வாறு தமது அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.


