ஆசிய கோப்பை சர்ச்சை * இந்தியாவுக்கு ஆதரவு

புதுடில்லி: இந்திய அணிக்கு ஆசிய கோப்பை கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ.,க்கு இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளன.
துபாயில் செப். 28ல் நடந்த ஆசிய கோப்பை 'டி-20' தொடரின் பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசளிப்பு விழாவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மொசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு துணை தலைவர் கலித் அல் ஜரூனி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதை ஏற்காத நக்வி, கோப்பையுடன் தனது ஓட்டலுக்கு சென்றார். இந்திய வீரர்கள் கோப்பை இல்லாமல் வெற்றியை கொண்டாடினர். தற்போது துபாயில் இருக்கும் ஏ.சி.சி., தலைமை அலுவலகத்தில் ஆசிய கோப்பை உள்ளது. இதை இந்தியாவுக்கு கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) முயற்சி தொடர்கிறது.
ஏ.சி.சி., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா, ஏ.சி.சி.,க்கான பி.சி.சி.ஐ., பிரதிநிதி ராஜிவ் சுக்லா, இலங்கை, ஆப்கானிஸ்தான் உறுப்பினர்கள் சேர்ந்து ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி மொசின் நக்விக்கு கடிதம் எழுதினர்.
இதற்கு, 'பி.சி.சி.ஐ., தரப்பில் இருந்து யாரவது ஒருவர் துபாய் வந்து, தன்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக் கொள்ளலாம்,' என நக்வி பதிலளித்தார்.
இதை பி.சி.சி.ஐ., நிராகரித்துவிட்டது. இப்பிரச்னைக்கு அடுத்த மாதம் நடக்க உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கூட்டத்தில் தீர்வு காணப்படலாம்,''என்றார்.

Advertisement