நள்ளிரவில் வீடுகள் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு

ஓட்டேரி: ஓட்டேரியில் நள்ளிரவில் வீடுகள் மீது பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில் வீசிய சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டேரி, மங்களபுரம் சேமாத்தம்மன் புதிய காலனி ஆறாவது தெருவில், நேற்று முன்தினம் இரவு 12:30 மணியளவில், மர்மநபர்கள் சிலர் போதையில் சாலையில் இருந்த வாகனங்களை அடித்து உடைத்தபடி சென்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக கழிப்பறை சென்றபோது, போதை ஆசாமிகளின் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அவர் மர்ம நபர்களை கண்டித்துள்ளார்.

ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், பீர்பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பாரதி உள்ளிட்டோர் வசிக்கும், ஐந்து வீடுகள் மீது துாக்கி வீசியுள்ளனர்.

இதில் எந்த பீர்பாட்டிலும் வெடிக்காமல் இருந்ததால், பெரும் விபத்து மற்றும் உயிரிழப்பு நிகழாமல் தப்பியது. இது குறித்து வழக்கு பதிந்த ஓட்டேரி போலீசார், போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement