தலைநகர் திரும்பிய வாகனங்களால் விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்

1

விக்கிரவாண்டி: தீபாவளி விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னைக்கு படையெடுத்து வாகனங்களால், விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை கொண்டாட, தலைநகர் சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்றனர். கடந்த நான்கு நாட்களில் 1.60 லட்சம் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்கேட்டை கடந்து சென்றன. இந்நிலையில் தீபாவளி முடிந்து நேற்று சென்னைக்கு திரும்ப ஆரம்பித்தனர். நேற்று ஒரே நேரத்தில் அனைவரும் புறப்பட்டதால் மதியம் 2:30 மணிக்கு மேல் சாலையில் கார், பஸ், வேன் என வாகனங்கள் அணிவகுக்க துவங்கின. இதனால், திருச்சி-சென்னை சாலையில் ஏராளமான வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக் குள்ளாகினர்.

பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து போலீசார் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்பிளாசாவை எளிதாக கடக்க 8 லேன்களை திறந்து வாகனங்களை விரைவாக அனுமதித்தனர்.

நேற்று முன்தினம் சென்னைக்கு 17 ஆயிரம் வாகனங்களும், நேற்று இரவு 7:30 மணி வரை, 32 ஆயிரம் வாகனங்களும் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடந்து சென்றன.

ஆங்காங்கே, மேம்பால பணிகள் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க, சென்னை செல்லும் இலகு ரக வாகனங்கள், விழுப்புரம் -செஞ்சி சாலையில், செஞ்சியிலிருந்து திண்டிவனம் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன.

இரவு முழுவதும் வாகன போக்குவரத்து இருக்கும் என்பதால் கனரக வாகனங்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் ஆசானுார் கூட்ரோடு பகுதியிலிருந்து திருக்கோவிலுார் வழியாக திருவண்ணாமலை ,சேத்பட் வழியாக சென்னை செல்லவும் , மற்றொரு பிரிவாக கனரக வாகனங்கள் ஜானகிபுரத்திலிருந்து பைபாஸ் சாலையில் புதுச்சேரி சென்று இ.சி.ஆர்., வழியாக சென்னை செல்ல திருப்பி விடப்பட்டது.

விழுப்புரம் எஸ்.பி., சரவணன், விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் முக்கிய இடங்களை கண்காணித்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement