ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக ஆப்பிரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி

திருப்பூர்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக, ஆப்பிரிக்க நாடுகளுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சியை, இந்திய ஏற்றுமதியாளர்கள் துவக்கியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து, ஆண்டுக்கு, 1.35 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்து வருகிறது.

உலக அளவில், ஆடை பயன்பாட்டில் அமெரிக்கர்கள் முதலிடத்தில் உள்ளனர். அமெரிக்காவின் இறக்குமதிக்கான 'டேரிப்' உயர்வு காரணமாக, அந்நாட்டுக்கான இந்திய ஏற்றுமதி ஸ்தம்பித்துள்ளது.

தடைபட்டிருந்த, தபால் சேவை மீண்டும் துவங்கியுள்ளதால், டேரிப் விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையும் தோன்றியுள்ளது.

இதன் காரணமாக, ரஷ்யா, ஆப்பிரிக்க நாடுகளுக்கான வர்த்தக வாய்ப்பை வலுவாக கட்டமைக்க, ஏற்றுமதியாளர்கள் விரும்புகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்சுடன், ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கிடையில், பசுமை சார் உற்பத்தி ஆடைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளில், வாய்ப்புள்ள பெரிய நாடுகளுக்கு, பருத்தி நுாலிழை ஆடை ஏற்றுமதியை மேம்படுத்தவும், வர்த்தக விசாரணை மெதுவாக துவங்கியுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''அமெரிக்க டேரிப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இருப்பினும், இனிவரும் நாட்களில், புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு நாடுகள் வழியாக ஆப்பிரிக்க நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் ஆடை ஏற்றுமதியை துவக்க, தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்திய ஏற்றுமதியாளர்களை பொறுத்தவரை, 2026 ஜன., முதல் புதிய கோணத்தில் வர்த்தகம் பயணிக்க துவங்குமென நம்புகின்றனர். இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பும் (பியோ) அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது,'' என்றார்.

Advertisement