ஜி.எஸ்.டி., குறைப்புக்கு பாராட்டு விழா; வணிகர்களுக்கு நெருக்கடி தரும் கட்சிகள்

சென்னை: ஜி.எஸ்.டி., குறைப்புக்கு பாராட்டு விழா நடத்துமாறு பா.ஜ., மற்றும் தி.மு.க., தரப்பில், வணிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
நம் நாட்டில் ஜி.எஸ்.டி., 5, 12, 18, 28 சதவீதம் என, நான்கு விகிதங்களில் இருந்தது. ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால், 5, 18 சதவீதம் என, இரு விகிதங்களாக குறைக்கப்பட்டு, செப்., 22ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஐந்து மாதங்களே உள்ளதால், மக்களையும், வாக்காளர்களையும் கவரும் பணியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. எனவே, ஜி.எஸ்.டி., குறைப்புக்கு நன்றி தெரிவித்து, மத்திய அரசுக்கு பாராட்டு விழா நடத்துமாறு, பா.ஜ., தரப்பில் வணிகர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தி.மு.க., தங்களுக்கு பாராட்டு விழா நடத்தும்படி வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, வணிகர்கள் தரப்பில் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டதற்கு, மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அழைத்து பாராட்டு விழா நடத்த வேண்டும், அதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் 500 வணிகர்கள் பங்கேற்க வேண்டும், 100 சங்க நிர்வாகிகளின் பட்டியலை முன்கூட்டியே தர வேண்டும் என, தமிழகத்தில் உள்ள முக்கிய வணிகர் சங்கங்களிடம், பா.ஜ., மேலிட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை, வணிகர் சங்க நிர்வாகிகள் தி.மு.க., தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க., தரப்பில், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளிடம், ஜி.எஸ்.டி.,யை குறைக்குமாறு தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தினார்.
அதனால்தான் ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டது. மே, 5ஐ அதிகாரப்பூர்வ வணிகர் தினமாக, தமிழக அரசு தான் அறிவித்தது; எனவே, வணிகர்கள் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என, தி.மு.க.,வினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்சிக்கு பாராட்டு விழா நடத்தினால், மற்றொரு கட்சியின் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்பதால், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெறாது: வானிலை மையம் தகவல்
-
இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி
-
நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; மும்பையில் அவசர தரையிறக்கம்
-
இந்தியா ஆச்சரியம் அளிக்கிறது: அமெரிக்க பெண் சுற்றுலா பயணி வியப்பு: வீடியோ வைரல்
-
2 மாவட்டத்துக்கு அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
-
நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி ஏமாற்றும் தமிழக அரசு; இபிஎஸ் குற்றச்சாட்டு