நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி ஏமாற்றும் தமிழக அரசு; இபிஎஸ் குற்றச்சாட்டு

18

தஞ்சை: நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. அவர்களுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் போனது என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.


தஞ்சை மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொட்டி வைத்து, விவசாயிகள் பல நாட்களாக காத்து கிடக்கின்றனர்.

மழையில், நனைந்த மூட்டைகளில் இருந்து, நெல்மணிகள் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை அருகே காட்டூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் பேசிய இபிஎஸ், நானும் ஒரு விவசாயி, எனவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசை வலியுறுத்துவேன் என்று உறுதி அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது;

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக திமுக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், விவசாயிகளிடம் இதுபற்றி கேட்ட போது வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக கூறுகின்றனர்.

தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. எனவே, விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் இருந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

காட்டூரைத் தொடர்ந்து, மூர்த்தியம்மாள்புரம் , திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement