சேவை செய்வதில் மக்கள் நம்பிக்கையை ஆர்.எஸ்.எஸ்., பெற்றுள்ளது: வாசன்

21

சென்னை: 'சமூக மாற்றத்திற்காக பாடுபடும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.,' என, த.மா.கா., தலைவர் வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவையொட்டி, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது:

சமூக மாற்றத்திற்காக பாடுபடும் உலகின் மிகப்பெரிய தன்னார்வ இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துக்களை ஒன்றிணைத்து, மற்றவர்களுக்காகவும் சேவை செய்வதில், மக்கள் நம்பிக்கையை பெற்ற இயக்கம்.

கருத்து வேறுபாடுகளை தீர்க்க; இயற்கையோடு இணக்கமாக வாழ; விளிம்பு நிலை மக்களுக்கு சேவை செய்ய உதவிக்கரம் நீட்டுகிறது.

ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதால், சமூக, சமத்துவம் நிலவும் என ஆர்.எஸ்.எஸ்., நம்புகிறது. 'இந்திய தேசிய கொடியை மதிப்போம். வெளிப்படையாக செயல்படுவோம். அமைதி வழிமுறைகளில் ஈடுபடுவோம். அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்போம்' என்கிறது, ஆர்.எஸ்.எஸ்.,

இந்தியாவில் ஏழைகளுக்கு சேவை செய்ய பல அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ்., உருவாக்கியுள்ளது.

அவற்றில், கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் இருப்பதும், முக்கியமான பதவிகளில் இருப்பதும் பொருத்தமான ஒன்று. பழங்குடியினரின் நலனுக்காகவும், 'ஏகல் வித்யாலயா' வாயிலாக, சிறப்பான கல்வி பணியிலும் ஈடுபடுகிறது.

உடற்பயிற்சி, விளையாட்டு, ஆன்மிகம், அறிவுசார் சொற்பொழிவு ஆகியவை வாயிலாக தன்னார்வலர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி அளிக்கிறது.

நெருக்கடி மற்றும் இயற்கை பேரிடர்களின்போது, மறுவாழ்வு பணிகளில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்., பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement