வன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது; ஞானேஷ்குமார் திட்டவட்டம்

5

கான்பூர்; வன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்க இன்னும் சில நாட்களே உள்ளன. ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் வேகம் எடுத்து வரும் அதே வேளையில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவை நடத்த தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் வேகப்படுத்தி வரும் சூழலில், ஜன் சுராஜ் கட்சியின் ஆதரவாளராக அறியப்படும் துலர்சந்த் யாதவ் என்பவர் கொலை வழக்கில் மொகாமா தொகுதி ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார்.

பிரபல தாதாவாக அறியப்படும் இவர் ஆளுங்கட்சி வேட்பாளர் மட்டுமின்றி, தற்போதைய எம்எல்ஏ நீலம் தேவியின் கணவரும் கூட. இந் நிலையில் கான்பூரில் நிருபர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்வர் குமார், வன்முறையை தேர்தல் கமிஷன் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது;

தேர்தல் நடவடிக்கைகளில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஓட்டுபோடும் உரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். வன்முறையை தேர்தல் கமிஷன் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

வாக்காளர்கள் அமைதியான முறையில் ஓட்டு போட முடியும் என்பதை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய தயாராகவே உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் பார்வையாளர்கள், போலீஸ் உயரதிகாரிகள் இந்த பணியில் தீவிரமாக உள்ளனர்.

இவ்வாறு தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறினார்.

Advertisement