இளம் வயதில் கோடீஸ்வரர்கள்; மார்க் ஜூக்கர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளிய இந்திய வம்சாவளி நண்பர்கள்

5

வாஷிங்டன்: இந்திய வம்சாவளி இளைஞர்கள் உள்பட அமெரிக்காவைச் சேர்ந்த 3 பள்ளி நண்பர்கள், ஸ்டார்ட்அப் மூலம் இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாகியுள்ளனர். இதன்மூலம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை முறியடித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் ஜோஸில் உள்ள பள்ளியில் சூர்யா மிதா,22, ஆதர்ஷ் ஹைரேமத் ,22, ஆகிய இரு இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரென்டன் பூடி,22, பயின்று வந்தனர். இவர்கள் மூவரும், இணைந்து மெர்கோர் என்ற ஏஐ நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

போர்ப்ஸ் அறிக்கையின்படி, சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், அண்மையில் 350 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இதன்மூலம் நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதனால், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரென்டன் பூடி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆதர்ஷ் ஹைரேமத் மற்றும் குழுத் தலைவர் சூர்யா மிதா ஆகியோர் இளம் வயதில் சுயதொழில் மூலம் கோடீஸ்வரர்களானவர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு 23 வயதில் இளம் வயதில் சுய தொழில் மூலம் கோடீஸ்வரர் ஆனவர்களில் பட்டியலில் முதன் முதலில் மார்க் ஜூக்கர்பெர்க் இடம்பிடித்தார். தற்போது, அவரை இந்த மூன்று நண்பர்களும் பின்னுக்கு தள்ளியுள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பாலிமார்க்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஷெய்ன் கோப்லான், 27, என்ஒய்எஸ்இ-ன் தாய் நிறுவனமான இன்டர்காண்டினென்டல் எக்ஸ்சேஞ்சில் இருந்து 2 பில்லியன் முதலீட்டைப் பெற்றதால் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். அவருக்கு முன்பாக, ஸ்கேல் ஏஐ நிறுவனத்தின் அலெக்ஸாண்ட்ரா வாங்,28, சுமார் 18 மாதங்கள் இந்தப் பட்டத்தை வகித்தார். அவரது இணை நிறுவனர் லூசி குவோ,30, சுய தொழில் மூலம் உருவெடுத்த முதல் பெண் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றார். பிரபல அமெரிக்க ராப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டை பின்னுக்குத் தள்ளினார்.

யார் இந்த சூர்யா மிதா - ஆதர்ஷ் ஹைரேமத்?



மெர்கோர் ஏஐ நிறுவனத்தின் குழு தலைவராக இருக்கும் சூர்யா மிதாவின் பெற்றோர் டில்லியைச் சேர்ந்தவர்கள். இவர்கள், அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அதன்பிறகு மவுன்டன் வீயூவில் சூர்யா மிதா பிறந்துள்ளார். கலிபோர்னியாவின் சான் ஜோஸில் வளர்ந்தார்.

சான் ஜோஸில் உள்ள ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் சூர்யா மிதா மற்றும் ஆதர்ஷ் ஹைரேமத் இருவரும் ஒன்றாக பயின்று வந்துள்ளனர். அதன்பிறகு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆதர்ஷ் கணினி அறிவியல் பயின்றார். ஆனால், மெர்கோர் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு, 2 ஆண்டுகளில் படிப்பை நிறுத்தி விட்டார். அதே சமயத்தில் தான், சூர்யா மிதா மற்றும் பிரென்டன் பூடி ஆகிய இருவரும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினர்.

மாறிப்போன வாழ்க்கை



இது குறித்து ஆதர்ஷ் ஹைரேமத் கூறுகையில், "மெர்கோரில் நான் சேராமல் இருந்திருந்தால், 2 மாதங்களுக்கு முன்பு நான் என்னுடைய கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றிருப்பேன். இவ்வளவு குறுகிய காலத்தில் என் வாழ்க்கை 180 டிகிரி மாறி விட்டது," எனக் கூறினார்.

Advertisement