'நாங்கள் போரில் பிஸியாக இருப்பதையே இந்தியா விரும்புகிறது' :புலம்புகிறார் பாக்., ராணுவ அமைச்சர்

3

இஸ்லாமாபாத்: “பாகிஸ்தானை கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தொடர்ந்து போர்நிலையில் வைத்திருக்க இந்தியா திட்டமிட்டுள்ளது,” என அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறினார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி நம் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' என பெயரிடப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவம் கேட்டதற்கு இணங்கி நான்கு நாட்களாக நீடித்த மோதலை நிறுத்த நம் ராணுவம் முடிவு செய்தது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு நம் நாட்டின் இந்த தாக்குதல் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த மோதலில் இருந்து மீள்வதற்குள், கிழக்கே உள்ள ஆப்கானிஸ்தானுடன், கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில், இரு தரப்பிலும் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் சமீபத்தில் ஒப்புக் கொண்டன.

இந்தச் சம்பவங்கள் குறித்து பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா நேற்று கூறியுள்ளதாவது:

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சி காலத்தில் இருந்தே அந்நாட்டை வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மறைமுக போர் நடத்தி வருகிறது.

நம் நாட்டை போர் நடவடிக்கைகளில் எப்போதும் பிஸியாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. நம்மை இரண்டு எல்லைகளிலும் சிக்கவைக்கவும் இந்கதியா முயற்சிக்கிறது.

பாகிஸ்தான், நாட்டு நிர்வாகத்தை விட்டுவிட்டு தொடர்ந்து சண்டையில் ஈடுபட வேண்டும் என இந்தியா விரும்புகிறது. தே வைப்பட்டால் இதற்கான ஆதாரங்களை நாங்கள் வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement