திமுகவில் துணை பொதுச் செயலாளர்கள் பதவி 7 ஆக உயர்வு: மாவட்ட பொறுப்பாளர் ஆனார் கதிர் ஆனந்த்
சென்னை: திமுகவில் துணைச் செயலாளர் பதவி, 7 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்துக்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்ட நிலையில், அதற்கு ஏதுவாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் நடந்து வருகிறது. அதன் முக்கிய நிகழ்வாக, கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவி என்பது 5ல் இருந்து 7 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
கனிமொழி, அமைச்சர் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. ராசா. அந்தியூர் செல்வராஜ் ஆகிய 5 பேரும் ஏற்கனவே கட்சியின் துணை பொதுச் செயலாளர்களாக உள்ளனர். இவர்களில் கனிமொழி, திருச்சி சிவா, ஆ. ராசா ஆகிய மூவரும் எம்பிக்கள்.
இந் நிலையில், இவர்கள் 5 பேருடன் மேலும் இருவருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி அளித்து கட்சியின் மொத்த துணை பொதுச் செயலாளர்கள் எண்ணிக்கையை 7 ஆக திமுக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் 5 துணை பொதுச் செயலாளர்களுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் இன்று துணை பொதுச்செயலாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் பொன்முடி ஏற்கனவே துணை பொதுச் செயலாளராக இருந்தவர். அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவி தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றமும் நிகழ்ந்து இருக்கிறது. அதன்படி, திருப்பூர், வேலூர் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக இல. பத்மநாபன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்பியாக இருக்கும் கே.ஈஸ்வரசாமி திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டு, வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வேலூர் தெற்கு (வேலூர் அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகள்) ஏ.பி.நந்தகுமார், வேலூர் வடக்கு (காட்பாடி. கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதிகள்), டி.எம். கதிர் ஆனந்த் ஆகியோர் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கதிர் ஆனந்த் திமுக பொதுச் செயலாளரும், மூத்த தலைவருமான துரைமுருகனின் மகன் ஆவார்.