'முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படிக்க பிடிக்கும்'

பவள விழா கொண்டாடும் 'தினமலர்' நாளிதழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

'தினமலர்' நிறுவனர் பெரியவர் மறைந்த டி.வி.ராமசுப்பையர் அவர்களை பல ஆண்டுகளுக்கு முன்பே நான் திருநெல்வேலியில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக அவரிடம் பேசி இருக்கிறேன். அவரது சமுதாய பொறுப்பு, இந்த நாட்டு மக்களின் மீது அவருக்கு இருக்கும் அக்கறை குறித்தெல்லாம் நான் தெரிந்து கொண்டேன். அவர் எவ்வளவு ஜாக்கிரதையாக 'தினமலர்' நாளிதழை மக்களுக்காக நடத்துகிறார் என்பதையும், பரபரப்பு செய்தி, வியாபார நோக்கம் இதற்கெல்லாம் 'தினமலர்' நாளிதழில், இடமில்லை என்பதையும், அவரிடம் பேசியதில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். மேலும், அவர் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி அன்று, தான் பிறந்ததை பெருமையாக கருதுவதாக என்னிடம் கூறினார்.

நான் தினந்தோறும் கிட்டத்தட்ட எல்லா நாளிதழ்களையும் படித்து விடுவேன். அதில், 'தினமலர்' நாளிதழ் முக்கிய இடத்தை பெறும். செய்தித்தாள் படிக்கும் பழக்கம் என்பது, மாணவனாக இருக்கும்போது ஏற்பட்டது அது, இன்று வரை தொடர்கிறது.

'தினமலர்' நாளிதழை பொறுத்தவரை, ஆளும் அரசை விமர்சிக்கும் அதே அக்கறை அரசு செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டுவதிலும் பாரபட்சமின்றி இருக்கும் என்பதை நான் அறிவேன். உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, அன்றைய நாட்டு நடப்பை, 'தினமலர்' படித்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

'தினமலர்' நாளிதழில் எந்த பக்கம் படிக்கப் பிடிக்கும் என்று கேட்டால், நான், முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படிக்க பிடிக்கும் என்று சொல்வேன். அதுதான் உண்மை.

டீக்கடை பெஞ்ச், இது அரசியல் கட்சிகள் பற்றிய ரகசியங்களை போகிற போக்கில் சொல்வது போல் இருக்கும். ஆனால், அது எல்லாத் தலைவர்களையும் படிக்க வைக்கும். அரசியல் தலைவர்களின் பேச்சு - பேட்டி, இவற்றை சுருக்கமாக வெளியிட்டு, கூடவே தங்கள் கருத்துக்களையும் சொல்லும் 'தினமலர்'. அதில் மெல்லிய நகைச்சுவையும் கொஞ்சம் நக்கலும் சேர்ந்து இருக்கும். இது, 'டவுட் தனபாலு' என்ற பகுதிக்கும் பொருந்தும்.

இதே போல், வாசகர் கடிதம். வாசகர் கடிதங்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பது அந்தப் பகுதியை பார்த்தாலே தெரியும். அது மக்களின் குரலாக தெரியும். இதே போல், 'சொல்கிறார்கள்' என்ற தலைப்பில் விளம்பர வெளிச்சத்திற்கு வராத பலரை இந்தப் பகுதியில் 'தினமலர்' அறிமுகப்படுத்தும்.

ஆன்மிகம், சிறுவர் மலர், வாரமலர் என்று மூன்று இலவச இணைப்புகளை வெளியிடுகிறது தினமலர். சிறுகதைகளுக்கு அவர்கள் சன்மானமாக ஆயிரங்களில் வாரி வழங்குகின்றனர். எழுத்தாளர்கள் பொருளாதார ரீதியாக பெரிய அளவு வசதியானவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கான இந்த சன்மானம் உண்மையான வெகுமானமாக நிச்சயம் இருக்கும். கதைகளும் படிக்கும்படி இருக்கின்றன என்பதையும் சொல்ல வேண்டும். பல அறிமுக எழுத்தாளர்களுக்கு 'தினமலர்' தான் ஆதரவு கரம் தந்து அணைத்துக் கொள்ளும். இது தவிர பிரபலங்களின் சுயசரிதை, அந்துமணியின் நச் பதில்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

'தினமலர்' எல்லோருக்குமான நாளிதழ். வேலை தேடி அரசுத் தேர்வு எழுதும் இளம் தலைமுறையினருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வாளர்களுக்கும் தேர்வு பயம் போக்கும் வகையில் அவர்களுக்கு அறிவுரை, என்ன படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம் போன்றவற்றையும் சமுதாய அக்கறையுடன் 'தினமலர்' தருகிறது. இந்த பணிக்கு வி.ஐ.டி., பல்கலைக்கழகம் 'தினமலர்' நாளிதழுக்கு பலமுறை உதவி செய்திருக்கிறது. இந்த உதவி தொடரும் என்ற உத்தரவாதத்தை நான் அளிக்கிறேன்.

'தினமலர்' ஆசிரியராக இருந்த இரா.கிருஷ்ணமூர்த்தி எனக்கு நெருக்கமான நண்பர். புராதன நாணயங்கள் பற்றி அவர் சொல்லும் தகவல் எல்லாம் எனக்கு ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கும். அவர் எழுதிய சில புத்தகங்களையும் எனக்கு அன்பளிப்பாக தந்தார். அதில், நாணயங்கள் பற்றி அவர் எழுதி இருக்கும் பல தகவல்களை எல்லாரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மக்களாட்சியை மேம்படுத்துவதில் பத்திரிகைகளின் பங்கு மிக முக்கியமானது. பத்திரிகைகள் என்பது சமுதாயத்தின் கண்ணாடி; மக்களின் மனசாட்சி. இவை இரண்டையும் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு அப்படியே பத்திரிகை நடத்தும் 'தினமலர்' நாளிதழுக்கு, அவர்கள் பணி தொடர மீண்டும் என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன்.

தமிழன்புடன்
'கல்விக்கோ' முனைவர் கோ.விசுவநாதன்
நிறுவுநர் - வேந்தர், வி.ஐ.டி., பல்கலைக்கழகம்

Advertisement