இக்கட்டான நிலையில் தமிழக அணி * 501 ரன் குவித்தது விதர்பா

கோவை: தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 501 ரன் குவித்தது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், 'நடப்பு சாம்பியன்' விதர்பா அணிகள் விளையாடுகின்றன. தமிழக அணி முதல் இன்னிங்சில் 291 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் விதர்பா அணி, முதல் இன்னிங்சில் 211/2 ரன் எடுத்திருந்தது. ஷோரே (80), ரவிகுமார் சமர்த் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.
யாஷ் சதம்
நேற்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. ஷோரே 82 ரன்னில் சாய் கிஷோர் சுழலில் சிக்கினார். சமர்த் (56) அரைசதம் அடித்தார். அடுத்து யாஷ் ரத்தோட், கேப்டன் அக்சய் வாத்கர் இணைந்தனர். யாஷ் சதம் அடித்தார். 5வது விக்கெட்டுக்கு 127 ரன் சேர்த்த போது யாஷ் (133) அவுட்டானார். விதர்பா அணி முதல் இன்னிங்சில் 501 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தமிழகத்தின் சார்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய தமிழக அணி நான்காவது நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 6/0 ரன் எடுத்து, 204 ரன் பின்தங்கி இருந்தது. இன்று கடைசி நாளில் பேட்டர்கள் பொறுப்பாக செயல்பட்டால், போட்டியை 'டிரா' செய்து, குறைந்தபட்சம் 1 புள்ளியை பெற முயற்சிக்கலாம்.

Advertisement