பாராட்டு மழையில் இந்திய வீராங்கனைகள்

நவி மும்பை: நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பாராட்டு தெரிவித்த விளையாட்டு நட்சத்திரங்கள்:
சச்சின்: 1983ல் உலக கோப்பை வென்ற போது, இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் தந்தது. இதுபோல தற்போது உலகை வென்ற இந்திய வீராங்கனைகளின் செயல்பாடு, இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையும். வாழ்த்துகள். உங்களால் ஒட்டுமொத்த நாடும் பெருமை அடைந்துள்ளது.
கோலி: உங்களது தன்னம்பிக்கை, திறமை, விடாமுயற்சியால், ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட செய்துள்ளீர்கள். இத்தருணத்தை முழுமையாக கொண்டாடுங்கள். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்.
சேவக்: உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். இது மிகச் சிறந்த வெற்றி.
குகேஷ், இந்திய செஸ் வீரர்: இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த தருணம் இது. முதன்முறையாக உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
டிவிலியர்ஸ், தென் ஆப்ரிக்க வீரர்: இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி உங்களை நிமிர்ந்து நிற்க செய்துள்ளது. உலகளவில் பெண்கள் விளையாட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. பைனல், சிறந்த போட்டிகளில் ஒன்றாக திகழும்.

இது வரலாறு

பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) அரங்கில், இதுவரை 13 சீசன் நடந்துள்ளது. இதில் ஒரு முறை (2025) சாம்பியன் ஆன இந்தியா, தலா 2 முறை பைனல் (2005, 2017), அரையிறுதி (1997, 2000) வரை சென்றது. ஒரு முறை (2009) 3வது இடம் பிடித்தது. ஐந்து முறை (1978, 1982, 1993, 2013, 2022) லீக் சுற்றோடு வெளியேறிய இந்தியா, இரண்டு முறை (1973, 1988) இத்தொடரில் பங்கேற்கவில்லை.

Advertisement