பூத் ஏஜன்ட், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தி.மு.க., - அ.தி.மு.க.,வில் தாராள 'கவனிப்பு'

3

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபடும் பூத் ஏஜன்டுகளை தாராளமாக கவனிக்குமாறு, தங்கள் கட்சி மாவட்ட செயலர்களுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமைகள் உத்தரவிட்டுள்ளன.


தமிழகத்தில், 2004ம் ஆண்டுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று துவங்கவுள்ளது. இப்பணியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.


கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்கள் அடிப்படையில், வீடு வீடாக சென்று, அங்குள்ள வாக்காளர்களுக்கு படிவம் வழங்கவுள்ளனர்.


அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன் சென்று கணக்கெடுப்பு பணிகளை கண்காணிக்க, தேர்தல் கமிஷனால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


அதன்படி, ஒரு ஒட்டுச்சாவடி அலுவலருடன், 12 பூத் ஏஜன்டுகள் வரை செல்ல உள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., பூத் ஏஜன்டுகளுடன், கூட்டணி கட்சிகளின் பூத் ஏஜன்டுகளும் செல்ல உள்ளனர். இவர்களுக்கு தேவையான பணம், உணவு உள்ளிட்டவற்றை கொடுத்து, தாராளமாக கவனிக்குமாறு, தங்கள் கட்சிகளின் மாவட்டச் செயலர்களுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.


அக்கட்சிகளின் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

ஓட்டுச்சாவடிகளில் கள்ள ஓட்டுகளை தவிர்ப்பது, தங்கள் கட்சி ஆதரவாளர்களை அழைத்து வந்து ஓட்டுகளை பதிய வைப்பது போன்ற,முக்கியமான பணிகளில், பூத் ஏஜன்டுகள் ஈடுபடுகின்றனர்.

அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பூத் ஏஜன்டுகளை உற்சாகமாக வைக்க, தீபாவளி முதல், தி.மு.க., தலைமை கவனிப்புகளை துவங்கி விட்டது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள பூத் ஏஜன்டுகளுக்கு, மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களால் சிறப்பு கவனிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, பூத் ஏஜன்டுகள் கண்காணிக்க உள்ளனர்.

இவர்களுக்கு காலை, மதிய உணவு, டீ, காபி, 'ஸ்நாக்ஸ்' செலவுடன், தினமும், 1,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரம் மற்றும் கிராமத்திற்கு ஏற்ப பகிர்ந்து வழங்க , மாவட்டச் செயலர்களுக்கு , தி.மு.க., தலைமை உத்தரவிட்டு உள்ளது.

அ.தி.மு.க., தரப்பில், பூத் ஏஜன்டுகளுக்கு இரண்டு வேளை உணவுடன், தினமும் 500 ரூபாய் சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உடன் வரும் கூட்டணி கட்சிகளின் பூத் ஏஜன்டுகளுக்கு உணவு வழங்க, இரு கட்சிகள் தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இப்பணிகளை, ஒன்றிய, நகரம், பேரூராட்சி, வட்ட செயலர்களிடம், மாவட்டச் செயலர்கள் ஒப்படைத்து உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கெடுப்பு பணி, ஒரு மாதம் நடக்க உள்ளதால், பூத் ஏஜன்டுகள் சந்தோஷமாக உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள், 70,000 பேர் ஈடுபட உள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து, அகவிலைப்படி உயர்வு மறுப்பு உள்ளிட்ட காரணங்களால், அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் அலட்சியம் காட்டினால், அது ஆளுங்கட்சிக்கு ஆபத்தாக முடியும்.

அதேநேரம், இந்தப் பணிக்காக அரசு தரப்பில் வழங்கப்படும் சன்மானம் சொற்பமாக இருக்கும் என்பதால், அவர்களை பூத் ஏஜன்டுகள் கவனித்தால், அதை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், கணக்கெடுப்புப் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனியாக 'கவனிக்க'வும், தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கேட்கும் உதவிகளை உடனுக்குடன் வழங்க, மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

அதேபோல், இப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்குமாறு, அ.தி.மு.க., தலைமையும், தமது கட்சியினரை அறிவுறுத்தியுள்ளது.



- நமது நிருபர் -

Advertisement