சாயக்கழிவால் நிறமாறிய நிலத்தடி நீர் மாசு கட்டுப்பாட்டுவாரியம் சோதனை

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், இ.ஆர்., தியேட்டர், ராமசாமி தெரு, ஆர்.எஸ்., சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நேற்று முன்தினம், குழாயை திறந்தால் சிவப்பு, ரோஸ் நிறத்தில் தண்ணீர் வருகிறது. இ.ஆர்., தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கிணற்று நீரிலும் சாயக்கழிவுநீர் கலந்ததால், தண்ணீர் நிறமாறி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, நேற்று நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி மற்றும் அதிகாரிகள், சாயக்கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர். முதலில், சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட கிணற்றை ஆய்வு செய்தனர். பின், கிணற்று நீரை எடுத்து பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வீடுதோறும் சென்று குடிநீரை ஆய்வு செய்து பரிசோதனை செய்தனர். பாதிக்கப்பட்ட தண்ணீரை மாதிரி எடுத்து சென்றனர்.

Advertisement