கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

60

கோவை: கோவையில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவியை, கத்தி முனையில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு:



மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது ஆண் நண்பர், கோவை ஒண்டிபுதுாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர்; மெக்கானிக் மற்றும் பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

கண்ணாடி உடைப்பு



நேற்று முன்தினம் (நவ.,02) இரவு 11:00 மணிக்கு இருவரும் காரில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்று, அப்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.



அப்போது அங்கு போதையில் வந்த மூவர், கார் கதவை தட்டி, இருவரையும் வெளியே வருமாறு அழைத்தனர். அச்சமடைந்த இருவரும், வெளியே வர மறுத்தனர். இதையடுத்து, மூவரில் ஒருவர் காரின் முன்பக்க கண்ணாடியை அரிவாளால் அடித்து உடைத்து உள்ளார்.
தொடர்ந்து, காரின் கதவு கண்ணாடியை உடைத்தனர். பின், காரில் இருந்த இளைஞரை கடுமையாக தாக்கி, அரிவாளால் வெட்டினர். அதில், அவருக்கு தலை மற்றும் காதின் அருகே காயம் ஏற்பட்டதை அடுத்து, மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, மூன்று மர்ம நபர்களும் மாணவியை ஒன்றரை கி.மீ., துாரம் இழுத்துச் சென்று, மறைவான இடத்தில் வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அடுத்தடுத்து மூவரும் பலாத்காரம் செய்ததால், தாக்குப்பிடிக்க முடியாமல் மாணவி மயங்கினார். நள்ளிரவில் அவரை அப்படியே விட்டு, மூவரும் அங்கிருந்து தப்பினர்.

நினைவு திரும்பியது



மயக்கமடைந்த வாலிபருக்கு அதிகாலை 3:00 மணிக்கு நினைவு திரும்பியது. அவர், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த விபரத்தை தெரிவித்தார். உடனடியாக பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வாலிபர் அளித்த தகவலில், மாணவியை அப் பகுதி முழுதும் போலீசார் தேடினர். இரண்டு மணி நேர தேடலுக்கு பின், கார் நின்றிருந்த இடத்தில் இருந்து ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால், மாணவி ஆடையின்றி மயங்கிய நிலையில் கிடந்தார்.

தனிப்படைகள் அமைப்பு



அவரை மீட்ட போலீசார், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, கோவை மாநகர போலீஸ் வடக்கு துணை கமிஷனர் தேவநாதன் தலைமையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

நள்ளிரவில் மாணவியின் கதறல்



காரில் இருந்த இளைஞரை அரிவாளால் வெட்டியதால் அவர் மயக்கமடைந்தார். அதன்பின் மாணவியை மர்ம நபர்கள் இழுத்து சென்றுள்ளனர். அப்போது மாணவி, 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என, கதறி சத்தமிட்டுள்ளார்.

மாணவியின் கதறல், அருகில் உள்ள சிலருக்கு கேட்டுள்ளது; அவர்கள் சென்று பார்த்த போது, இருட்டில் அங்கு யாரும் இல்லை. அதற்குள் மூவரும் மாணவியை மறைவான இடத்துக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.




குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு




இந்நிலையில் கோவை போலீசார் குற்றவாளிகளை தேடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். சுதாரித்த போலீசார் குற்றவாளிகள் மூவரையும் காலில் சுட்டுப்பிடித்தனர். காயம் அடைந்துள்ள மூவருக்கும், கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement