அ.தி.மு.க., அலுவலகத்தில் பேனர் அகற்றியதால் பரபரப்பு

சென்னை: சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை, காவல் துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில், 2,538 பணி நியமனத்தில், ஒரு வேலைக்கு 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு வேலை கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாக, தமிழக டி.ஜி.பி.,க்கு, அமலாக்கத் துறை சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதத்தை வைத்து எப்.ஐ.ஆர்., போடவும் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், தி.மு.க.,வின் மோசடியை அம்பலப்படுத்தும் வகையில், சென்னையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் முன், அக்கட்சியின் ஐ.டி., அணி சார்பில், பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டது.

அதில், '2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் என்றால், மொத்த லஞ்சப்பணம் எவ்வளவு' என்று பொது மக்களில் ஒருவர் கேள்வி கேட்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதை அ.தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

அதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர், பேனரை அகற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., - ஐ.டி., அணி செயலர் ராஜ் சத்யன், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

'பேனரை எடுக்க மாட் டோம்; வேண்டுமானால் வழக்கு போட்டு கொள்ளுங்கள்' எனக் கூறினார். இதனால், பிரச்னை வேண்டாம் என முடிவெடுத்து, போலீசார் அங்கிருந்து கிளம்பினர்.

Advertisement