வெடி மருந்து ஆலை அமைக்க ஜெர்மன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ருமேனியா: புசாரெஸ்ட்: 'நேட்டோ' எனப்படும் ராணுவ பாதுகாப்பு அமைப்பின் உறுப்பு நாடான ருமேனியா, ஜெர்மனியின் 'ரெய்ன்மென்டால்' நிறுவனத்துடன் இணைந்து வெடி மருந்து ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ருமேனியா, மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான ரெய்ன்மென்டால் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து, மத்திய ருமேனியாவில் உள்ள விக்டோரியா நகரில் வெடி மருந்து ஆலை ஒன்றை கட்டமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆலை, 5,420 கோடி ரூபாயில் அமைகிறது.

வரும் 2026ல் இந்த ஆலைக்கான கட்டுமானப் பணி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளில் பணிகளை நிறைவு செய்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆலையின் வாயிலாக 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், ருமேனியாவில் வெடி மருந்து ஆலைக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ருமேனியா ஏற்கனவே உக்ரைனுக்கு 'பேட்ரியாட்' ஏவுகணை அமைப்பை நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும், எப் - 16 ரக போர் விமான ஓட்டிகளுக்கான சர்வதேச பயிற்சி மையத்தை, நேட்டோ நட்பு நாடுகள் ருமேனியாவில் திறந்துள்ளன.

Advertisement