ஜி.எஸ்.டி.,யின் கீழ் அரிசி, பருப்பு, கோதுமைக்கு இரட்டை வரி வரிச்சீரமைப்பில் விடுபட்டதால் வணிகர்கள் ஏமாற்றம்

மதுரை: வரிச்சீரமைப்பில் விடுபட்டுள்ள அரிசி, பருப்பு, கோதுமை, தினை, மாவு, வெல்லம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யின் கீழ் உள்ள இரட்டை வரிவிகிதத்தை நீக்க வேண்டுமென தமிழக உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வரிவிலக்கில் விடுபட்டுள்ள பொருட்களால் வணிகர்கள் மட்டுமின்றி சாமானியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் நவம்பர் இறுதியில் நடக்க உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் இதைச் சரிசெய்ய வேண்டுமென சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

ஜி.எஸ்.டி.,யின் கீழ் அரிசி, பருப்பு, கோதுமை, தினை, மாவு, கரும்பு, வெல்லம், பனை வெல்லம் போன்ற பொருட்களுக்கு இரட்டை விகித வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டபோது இந்த உணவுப்பொருட்கள் 'பிராண்ட்' பெயரில் விற்கப்பட்டால் வரி விதிக்கப்பட்டது. பதிவு செய்யப்படாத 'பிராண்ட்' பெயரில் விற்கும் போது வரிவிலக்கு அளிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் கீழ், உணவுப் பொருட்களை விற்பதற்கு 'பேக்கிங்' செய்வது அவசியம்.

தற்போது அத்தியாவசியப் பொருட்கள் 25 கிலோவுக்கு மேல் 'பேக்கிங்' செய்யப்பட்டால் வரிவிலக்கும், அதற்கு குறைவாக அதாவது ஒரு கிலோ, 2 கிலோ, 5 கிலோ அளவில் 'பேக்கிங்' செய்தால் வரிவிதிக்கப்படுகிறது. நடுத்தர, உயர் வருமானப் பிரிவினர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கும் போது வரிவிலக்கு பெறுகின்றனர். அதேநேரத்தில் சாமானியர்கள் வாங்கும் குறைந்த எடையுள்ள 'பேக்கிங்' பொருட்களுக்கு வரிவிதிக்கப்படுவதை ஏற்கமுடியாது.

இரட்டை வரி விகிதத்தால் வணிகர்களில் சிலர் வரி ஏய்ப்பும் செய்கின்றனர். அதாவது உணவுப் பொருட்களை ஒரே 30 கிலோ பையாக 'பேக்கிங்' செய்து வரிவிலக்கு பெற்று, அந்த பெரிய பைக்குள் அரை கிலோ, ஒரு கிலோ 'பேக்கிங்' பொருட்களை வைத்து விற்கின்றனர். பனை ஓலை பெட்டியில் 10 கிலோ அளவு மட்டுமே பனை வெல்லத்தை வைக்க முடியும். கூடுதலாக வைக்கும் போது அதன் சுவையும் தரமும் அழுத்தத்தால் மாறி விடும். இதற்கு வரிவிதிக்கப்படுகிறது.

சூப்பர் மார்க்கெட் களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட ஈர இட்லி மாவை வாங்கி வரி விதிக்கின்றனர் ஜி.எஸ்.டி., கவுன்சில் அதிகாரிகள். அந்த மாவு சீக்கிரம் கெட்டுப் போகாது.

சிறு கடைகளில் வைத்து விற்கப்படும் ஈர இட்லி மாவு பாக்கெட் 10 மணி நேரத்தில் புளித்துவிடும். அதற்கு 5 சதவீத வரி உள்ளது. அரிசி, பருப்பு, கோதுமை, தினை, மாவு, கரும்பு வெல்லம், பனை வெல்லம் போன்ற உணவுப் பொருட்களின் இரட்டை வரியை நீக்கி, முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

Advertisement