பீஹார் தேர்தலில் ஓட்டளிக்க பயணம்; ரயில்வே ஸ்டேஷனில் தள்ளுமுள்ளு

திருப்பூர்: பீஹார் மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க சொந்த ஊர் புறப்பட்ட தொழிலாளர்களால், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பீஹாரில், வரும், 6 மற்றும் 11ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதன் தலைநகர் பாட்னா, கயா, அவுரங்காபாத், தர்பங்கா, பாகல்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அம்மாநில தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் திருப்பூரில் வந்து தங்கி பணிபுரிகின்றனர்.


அக். 20ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பலரும் ஒரு மாதம் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து பீஹாருக்கு பயணத்தை தொடர்ந்தனர்.இருப்பினும், தீபாவளிக்கு செல்லாதவர்கள், தேர்தலில் ஓட்டளிக்க, பீஹார் புறப்பட்டனர். அவ்வகையில், நேற்று ஜார்கண்ட் மற்றும் பீஹார் மாநிலம் வழியாக பயணிக்கும் ஆலப்புழா - தன்பாத் ரயில் உட்பட பல்வேறு வடமாநில ரயில்களில் பயணிக்க கூட்டம் அதிகரித்திருந்தது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் ஆயிரக்கணக்கானோர் ரயிலுக்காக காத்திருந்தனர்.


ரயில், ஸ்டேஷனுக்குள் நுழைந்த உடன் 'திபுதிபுவென' பொது பெட்டி நோக்கி ஓடி, பெட்டிகளில் ஏற தொழிலாளர்கள் முயன்றனர். பெண்கள், வயதானவர்கள் என யாரும் ஒதுங்கி நிற்கவில்லை. இந்த தள்ளுமுள்ளுக்கு இடையேயும், ரயிலில் முட்டிமோதி ஏறிக்கொண்டனர்; ஒவ்வொருவர் கையிலும் துாக்க முடியாத கனமான பை வேறு இருந்தது.பீஹார் தேர்தலை ஒட்டி, கடந்த ஒரு வாரமாக அதிகமான வடமாநிலத்தவர் ரயிலில் பயணிக்க வருவதால், 30 பேர் கொண்ட போலீஸ் குழு, ஆர்.பி.எப்., அதிகாரிகள் பெட்டிக்கு ஒருவர் வீதம் நின்று, பயணிகளை வழியனுப்பி வைக்கின்றனர்.

Advertisement