வேட்பாளர் வாய்ப்புக்கு 'பென் டீமிடம்' 'இன்புளுயன்ஸ்' செய்யும் தி.மு.க.,வினர்; 'போட்டுக்கொடுக்கும்' அரசியலும் ஜரூர்

10


மதுரை: சட்டசபை தேர்தலில் எப்படியாவது வேட்பாளர் வாய்ப்பை பெற்று விடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுங்கட்சியின் பென் டீம் குழுவினரை வளைக்கும் வகையில் மாவட்டங்களில் தி.மு.க.,வினர் பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர்.


சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் தற்போது ஆளும், எதிர்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன்பின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கிறது. தற்போது தொகுதிவாரியாக உள்ள ஆளுங்கட்சியின் பென் டீம் உறுப்பினர்கள் பல்வேறு சர்வேக்களை மேற்கொள்கின்றனர்.

அதில் தற்போது 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடுகள், மீண்டும் அதே தொகுதியில் அவர்கள் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், சிட்டிங் எம்.எல்.ஏ.,வுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்திருந்தால் அந்த தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம், மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் உள்ளிட்ட தகவல்களை களநிலவரத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் சர்வே நடத்தி வருகிறது.



இத்தகவல் அறிந்த எம்.ஏல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ., கனவில் உள்ள நிர்வாகிகள் பென் டீம் உறுப்பினர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான 'வசதிகளை' செய்துகொடுத்து, 'ஜாதி பாசத்தையும்' வெளிப்படுத்துகின்றனர். பல மாவட்டங்களில் தங்களை முன்னிறுத்தும் விஷயங்களை தெரிவிப்பதுடன், தொகுதியில் தனக்கு போட்டியாக உள்ள நிர்வாகிகளை 'போட்டுவிடும்' தகிடுதத்தங்களிலும் ஈடுபடுகின்றனர்.



இது குறித்து தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது: இந்த தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு இளைஞரணிக்கு கணிசமாக கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சீனியர் நிர்வாகிகள் 'பென் டீமை' வளைக்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த டீம் அறிக்கையால் மட்டும் வாய்ப்பு கிடைத்துவிடாது.


உளவுத்துறை அறிக்கை, அமைச்சர், மாவட்ட செயலாளர்கள் சிபாரிசு அடிப்படையிலும் பரிசீலனை நடக்கும். இருந்தாலும் பென் டீம் அறிக்கை லிஸ்ட்டில் இடம் பெற்று கூடுதல் தகுதியை பெற்றுவிட வேண்டும் என சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்விஷயம் குறித்து கட்சித் தலைமை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றனர்.

Advertisement