மூன்றாவது சுற்றில் குகேஷ் * உலக கோப்பை செஸ் தொடரில்...
கோவா: உலக கோப்பை செஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு குகேஷ், அர்ஜுன் முன்னேறினர்.
கோவாவில், செஸ் உலக கோப்பை 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தன.
உலக சாம்பியன் குகேஷ், கஜகஸ்தானின் நோகெர்பெக் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. நேற்று இரண்டாவது போட்டியில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் தடுமாறிய போதும், 59 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 1.5-0.5 என வென்ற குகேஷ், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், பல்கேரியாவின் மார்டின் பெட்ரோவை வீழ்த்தினார். அர்ஜுன் 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்திய வீரர் திப்தயான் கோஷ், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற முன்னணி வீரர், ரஷ்யாவின் நேபோம்னியாட்சி மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் அசத்திய திப்தயான், 1.5-0.5 என வெற்றி பெற்றார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஆஸ்திரேலியாவின் தெமுர் இடையிலான இரண்டாவது போட்டியும் 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமனில் உள்ளது. இன்று 'டை பிரேக்கர்' நடக்கிறது. இதில் சாதித்தால் பிரக்ஞானந்தா அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.