மீண்டும் விளாசுவாரா வாஷிங்டன் * இன்று நான்காவது 'டி-20' சவால்
கோல்டு கோஸ்ட்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இன்று நான்காவது 'டி-20' போட்டியில் மோதுகின்றன. இந்திய பேட்டர்கள் மீண்டும் அசத்தினால் இரண்டாவது வெற்றி பெறலாம்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3 வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடக்கிறது.
மீள்வாரா சுப்மன்
இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் தருகிறது. முதல் 3 போட்டியில் 112 ரன் எடுத்து, இத்தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 'நம்பர்-1' ஆக உள்ள அபிஷேக், மீண்டும் மிரட்டலாம்.
ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக களமிறங்கிய 6 இன்னிங்சில் (10, 9, 24, 37, 5, 15) சுப்மன் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதில் இருந்து சுப்மன் மீண்டு வர வேண்டும்.
கேப்டன் சூர்யகுமார், முதல், 3வது போட்டியில் சிறப்பாக துவக்கினார். இதை தொடர்ந்தால் நல்லது. திலக் வர்மா, அக்சர் படேலும் அணிக்கு கைகொடுக்கலாம். வாஷிங்டன் சுந்தர் (23 பந்து, 49 ரன்), ஜிதேஷ் ஜோடி இணைந்து இந்தியாவுக்கு சிறப்பான 'பினிஷிங்' தர வேண்டும்.
அர்ஷ்தீப் நம்பிக்கை
பவுலிங்கில் இந்திய அணிக்கு பும்ரா (3 போட்டி, 2 விக்.,), அர்ஷ்தீப் சிங் (1ல் 3 விக்.,) ஜோடி வேகப்பந்து வீச்சில் புதிய நம்பிக்கை தருகிறது. சுழலில் வருண் சக்ரவர்த்தி (4), வாஷிங்டன் பலம் சேர்க்கலாம். பவுலிங்கில் ரன்களை வாரி வழங்கும் ஷிவம் துபேவுக்குப் பதில், காயத்தில் இருந்து மீண்ட நிதிஷ் குமார் அணியில் இடம் பெற உள்ளார்.
டிராவிஸ் ஹெட், ஹேசல்வுட் என இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இதனால் கேப்டன் மிட்சல் மார்ஷுடன், இன்று மாத்யூ ஷார்ட் துவக்கம் தர காத்திருக்கிறார். டிம் டேவிட் வேகமாக ரன் சேர்க்கிறார். தவிர இங்லிஸ், ஸ்டாய்னிசுடன், 'ஆல் ரவுண்டர்' மேக்ஸ்வெல் வருகை அணிக்கு பலம் சேர்க்கிறது.
சுழலில் ஜாம்பா, குனேமான் கைகொடுக்கலாம். வேகப்பந்து வீச்சில் இதுவரை 6 விக்கெட் சாய்த்த நாதன் எல்லிஸ், பார்ட்லெட் (3), பென் டிவார்ஷியஸ் கூட்டணி நெருக்கடி தர முயற்சிக்கும்.
மழை வருமா
* கோல்டு கோஸ்ட் நகரில் வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை.
* இம்மைதானத்தில் நடந்த இரு போட்டியில் ஆஸ்திரேலியா தலா ஒரு வெற்றி (வெ.இண்டீஸ்), தோல்வி (தெ.ஆப்.,) அடைந்தது.
* இந்திய அணி முதன் முறையாக இங்கு விளையாட உள்ளது.
சுப்மன் விளாசுவார் அதிரடி காட்டுவார் என்று பில்டப் கொடுத்தது தவரு.