சத்தீஸ்கர் ரயில் விபத்து பலி 11 ஆக உயர்வு

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் அருகே நேற்று முன்தினம் நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்புறம், கோர்பா மாவட்டத்தின் கெவ்ராவில் இருந்து பிலாஸ்பூர் நோக்கி சென்ற பயணியர் ரயில் மோதியது. இந்த விபத்தில் எட்டு பேர் பலியாகினர்; 20 பேர் காயமடைந்தனர்.

பயணியர் ரயிலின் சிதைந்த பெட்டியை ஊழியர்கள் பல மணி நேரம் போராடி வெட்டி அகற்றினர். இதில் சில உடல்கள் சிக்கியிருந்தன. இதையடுத்து பலி எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் ஆறு பேர் பெண்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்களில் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நான்கு பெண்கள், இரு ஆண்கள் உடல் அடையாளம் காணப்படவில்லை.

விபத்து குறித்து மூத்த ரயில்வே அதிகாரி கூறுகையில், 'மணிக்கு, 70 கி.மீ., வேகத்தில் வந்த பயணியர் ரயில் டிரைவர் சிவப்பு சிக்னலை மீறி, நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளார்.

'பார்வைக்கு எட்டும் துாரத்தில் சரக்கு ரயில் நிற்பதை அறிந்தும் பயணியர் ரயில் டிரைவர் பிரேக் பிடிக்காதது ஏன் என்பது குறித்து விசாரணை நடக்கிறது' என்றார்.

Advertisement