பீஹாரில் காங்கிரஸ் கூட்டணியில் மோதல் : பிரதமர் மோடி

6

பஹல்பூர்: '' பீஹாரில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டுள்ளனர். அவர்களால் மக்கள் நலனில் அக்கறை செலுத்த முடியாது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பீஹாரில் நவ.,11ல் நடக்கும் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு பஹல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது : பீஹாரில் அதிக ஊழல் செய்த கட்சியின் குடும்பமும், நாட்டில் அதிக ஊழல் செய்த கட்சியின் குடும்பமும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இருவரும் ஆட்சியில் இருந்திருந்தால், பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி அவர்களின் கஜானாவுக்கு சென்றிருக்கும். இன்றும் அதிகாரத்தில் இல்லாத போதும், இருவரும் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதில் குறியாக உள்ளனர். பெயரில் மட்டுமே இருவரும் கூட்டாளிகள். ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிடுவது அவர்களின் முக்கிய வேலையாக உள்ளது. நகர் முழுவதும் ஆர்ஜேடியின் போஸ்டர்கள் உள்ளன. ஆனால், காங்கிரஸ் வாரிசு அரசியல்வாதியின் புகைப்படம் உள்ளதா?


அதில் ஒன்று இருந்தால் தொலைநோக்கி மூலம் தேட வேண்டும். மறுபுறம், காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ஜேடி தலைவர்களை விமர்சிக்கின்றனர். ஆர்ஜேடி தலைவர்கள் வெளியிடும் அறிவிப்புகளை கண்டு காங்கிரஸ் தலைவர்கள் மவுனமாகி விடுகின்றனர்.சமீப நாட்களாக, நாங்கள் தான் பெரிய கட்சி எனவும், ஆர்ஜேடி சிறிய கட்சி எனவும், சிறிய கட்சி எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த ஆணவத்தை ஆர்ஜேடி எதிர்க்கிறது. ஒருவரை ஒருவர் அழித்து வருவதை பார்க்க முடிகிறது.


முதல்வர் வேட்பாளரை காங்கிரசிடம் இருந்து ஆர்ஜேடி துப்பாக்கி முனையில் பறித்துள்ளது. இதனையடுத்து, அக்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. காங்கிரசின் குடும்ப வாரிசு சில நாட்களாக பீஹார் பக்கம் வரவில்லை. அவர் பீஹார் வருவதற்கு தயங்குவதாகவும் அவரை வலுக்கட்டாயமாக வரவழைத்துள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். ஆனால், அவர் ஆர்ஜேடி கட்சியை துன்புறுத்துகிறார். அதிகாரத்துக்காக கூட்டணி கட்சியை ஏமாற்றுபவர்கள், மக்களின் நலனுக்கு உழைக்க மாட்டார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement