வேளச்சேரி - பரங்கிமலை இடையே 'சரக்கு ரயில்' இயக்கி சோதனை 17 ஆண்டுகளாக நீடித்த பணி நிறைவு

3

சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை இடையே மேம்பால பணிகள் முடிந்துள்ள நிலையில், முதல் முறையாக நேற்று, சரக்கு ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி மேம்பால பாதையில், தினமும் 100 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வேளச்சேரி - பரங்கிமலை 5 கி.மீ., துாரம் இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை திட்டப்பணி, 2008ம் ஆண்டில் துவங்கப்பட்டது. ஆனால், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் பணிகள் முடங்கின.

ஒரு வழியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, இந்த தடத்தில் 2022ம் ஆண்டுக்கு பின் மீண்டும் பணிகள் நடந்தன.

கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வந்த மேம்பால ரயில் இணைப்பு பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு, 10 பெட்டிகளுடன் நேற்று, சரக்கு ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து, சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானிகள் வோக்கு சீனிவாஸ், இங் சப்தர்ஷி, மூத்த முதன்மை விஞ்ஞானி அருண்சுந்தரம் கூறியதாவது:

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் பாதை கட்டுமான பணி முடிந்துவிட்டது. இந்த பணியின் தரம், உறுதி தன்மை ஆகியவை தொடர்பாக, 10 பெட்டிகள் உடைய சரக்கு ரயில்களை இயக்கி, நேற்று சோதனை நடத்தப்பட்டது.

ஆய்வில், வடிவமைப்பில் குறிப்பிட்ட தரத்தில் பால கட்டமைப்பு உள்ளதா என, ஆய்வு செய்தோம். பாலத்தின் இடைவெளியில் அதிர்வு, வளைவு உள்ளிட்டவை, நவீன கருவிகள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது, இரண்டு இடங்களில் ஆய்வு நடந்துள்ளது. இன்னும் ஏழு இடங்களில் ஆய்வு நடத்தப்படும். முழுமையான ஆய்வு முடிந்ததும், ஆய்வு அறிக்கை ரயில்வே துறையிடம் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement