'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!

8


புதுடில்லி: சிலிகுரி வழித்தடத்தை பாதுகாக்கும் வகையில், மூன்று இடங்களில் புதிய ராணுவ முகாம்களை இந்தியா நிறுவியுள்ளது.


வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற முதலில் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் உளவு அமைப்பு, பயங்கரவாத அமைப்பினரும், வங்கதேசத்தில் புதிய தளம் அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய சூழலில், இந்தியா கிழக்கு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்தியா - வங்கதேசம் இடையே மொத்தம் 4,096 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லை பகுதி விரிந்துள்ளது. மேற்கு வங்கத்துடன் மட்டும் 2,217 கிலோமீட்டர் எல்லையை வங்கதேசம் கொண்டுள்ளது.
இதில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 'சிக்கன் நெக்' பகுதியும் அமைந்துள்ளது. அதாவது நம் நாட்டின் பிற பகுதிகளுடன் வடகிழக்கு மாநிலங்களை இணைப்பது இந்த 'சிக்கன் நெக்' பகுதியாகும். இதையொட்டி, நேபாளம், பூடான், வங்கதேசம், சீனா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

இதனால் இந்த 22 கி.மீ அகலம் கொண்ட சிக்கன் நெக் அல்லது சிலிகுரி வழித்தடம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. வரைபடத்தில் இந்த இடத்தை பார்த்தால் கோழியின் கழுத்து போல் இருக்கும். இதுவே, 'சிக்கன் நெக்' என்ற பெயர் நிலைப்பதற்கு காரணமானது.



சீனாவுடன் உரசல் இருக்கும் நிலையில், வங்கதேசத்துடனும் உறவுகள் சீர்கெட்டதால் உஷாரான மத்திய அரசு, சிலிகுரி வழித்தடத்தை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி வங்கதேச எல்லையில் 3 புதிய ராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. பமுனி (துப்ரிக்கு அருகில்), கிஷன்கஞ்ச் மற்றும் சோப்ரா ஆகிய இடங்களில், இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில், இந்த முகாம்கள் அதிநவீன ஆயுதங்களை கொண்ட படையினருடன் நிறுவப்பட்டுள்ளன.

Advertisement