வீடு மாறினால் ஓட்டு உண்டா; என்னென்ன ஆவணம் தேவை?: வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் கேள்விகள் ஏராளம்
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் எழுந்துள்ள கேள்விகளுக்கு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடர்பான செயல்பாடுகளுக்கு, 'வார் ரூம்' அமைக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்கள் குறித்து, இங்குள்ள 80654 20020 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்; விளக்கம் பெறலாம். இந்த வார் ரூமிற்கு, நேற்று முன்தினம் ஒரே நாளில் 627 புகார்கள் வந்துள்ளன. அப்போது, பொதுமக்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இது போன்று, பல தரப்பிலும் இருந்து, தேர்தல் ஆணையத்திற்கு கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் அளித்த விளக்கம்:
கடந்த 2002ல் ஓட்டளித்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு மாறி குடியேறியிருந்தால், ஓட்டுரிமை தற்போது எந்த இடத்தில் அமையும்?
வாக்காளர் இன்றைக்கு எந்த முகவரியில் இருக்கிறாரோ, அந்த இடத்திற்கு தான் கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கப்படும். 2002ம் ஆண்டில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்ற தகவல் மட்டுமே, அப்போது சரிபார்க்கப்படும்.
மனைவியின் ஓட்டுரிமை, அவரது சொந்த ஊரில் உள்ளது. இப்போது உள்ள முகவரிக்கு ஆதாரமாக, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை என இரண்டு ஆவணங்கள் மட்டுமே உள்ளன. இவற்றை ஏற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியுமா?
கணக்கெடுப்பின் போது, இதுபோன்ற எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை. தேவைப்பட்டால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், 13 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.
படிவத்தில் உறவினர் குறித்த தகவலை கட்டாயம் நிரப்ப வேண்டுமா?
தந்தை அல்லது பாதுகாவலரின் பெயரை பதிவு செய்தால் மட்டும் போதும்.
கடந்த 2024ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது. தற்போது பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
ஓட்டுச்சாவடி அலுவலரிடம், படிவம் - 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். ஆனால், வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாது. அதன்பின், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, இறுதி பட்டியலில் சேரலாம்.
குடும்பத்தில் எவரேனும் வெளிநாட்டில் வேலை யில் இருந்தால், அவருடைய படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?
வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்பத்தார், அந்த படிவத்தை பூர்த்தி செய்து தரலாம். விரைவில், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இது குறித்த தகவல் முறைப்படி வெளியிடப்படும்.
கடந்த 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், பெற்றோர் பெயர் இடம் பெறவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும்?
தாத்தா, பாட்டி பெயர் இருந்தால் குறிப்பிடலாம். அதுவும் இல்லையென்றால், ஒன்றும் பிரச்னையில்லை. கணக்கெடுப்பு படிவத்தில் தேவைப்பட்டால், புதிய புகைப்படத்தை ஒட்டி, கையெழுத்து போட்டு கொடுத்தால் மட்டும் போதும். பின்னர், 13 ஆவணங்களில் ஒன்றை சமர்பித்துக் கொள்ளலாம்.
கணக்கீட்டு படிவத்தில் தகவல்களை தவறாக பதிவிட்டால், மீண்டும் புதிய படிவம் வழங்கப்படுமா?
புதிய படிவம் வழங்கினால், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, தவறாக எழுதியிருந்தால், அதை அடித்துவிட்டு, திருத்திக் கொடுக்கலாம்.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுவதில்லை. இதனால், படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதை எவ்வாறு சரி செய்வது?
இப்போது கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கும் பணி மட்டுமே நடக்கிறது. விரைவில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள், தேவையான உதவிகளை வாக்காளர்களுக்கு வழங்குவர். ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அணுகலாம் அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.
மாவட்டங்களின் எஸ்.டி.டி., கோடு இருந்தால், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். மாவட்டங்களில் இருந்து தொடர்பு கொள்ளும் போது, நேரடியாக அந்த மாவட்டத்தின் உதவி மையத்திற்கு அழைப்பு செல்லும். அங்கு, தேவையான விளக்கங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாக்காளர் கணக்கெடுப்பு: குழப்பமோ குழப்பம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, 2004ம் ஆண்டுக்கு பின், இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, டிசம்பர் 4 வரை வீடுதோறும் சென்று, வாக்காளர் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆனால், வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.
துவங்கவில்லை சில இடங்களில் வாக்காளர்களுக்கு, இரண்டு முறை படிவம் வழங்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் படிவம் வினியோகம் செய்யும் பணியே துவங்கவில்லை; வாக்காளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆளும் கட்சி நிர்வாகிகளிடம், மொத்தமாக படிவங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒப்படைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
படிவம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடியாமல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருகின்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவில்லை என காரணம் கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு மேம்படுத்தப்பட்ட மொபைல் போன் செயலியை, இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.
பயிற்சி தாமதம் இதை காரணம் காட்டி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி தாமதமாகி வருகிறது. இவ்வாறு, கணக்கெடுப்பு நிலையிலேயே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், வாக்காளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர்கள் அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களில் நேரடியாகவும், கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் விளக்கங்களை பெற முடியவில்லை என்றும், வாக்காளர்கள் தரப்பில் புகார் சொல்லப்படுகிறது.
@block_P@
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான சேவைகளுக்காக, 'இ.சி.ஐ.நெட்' என்ற செயலி, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தேர்தல் தொடர்பாக பயன்பாட்டில் இருந்த, 40 மொபைல் செயலிகள், இணைய சேவைகளை ஒரே தளத்தில் இணைத்து வழங்கும் வகையில், இ.சி.ஐ.நெட் செயலி தயாராகியுள்ளது.
இதில், வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லாமல், மாநிலம், மாவட்டம், சட்டசபை தொகுதி விபரங்கள் உள்ளிட்ட தகவலை பெறலாம்.
இந்த வசதியை பயன்படுத்தி, உடுமலை சட்டசபை தொகுதி (125) குறித்த விபரங்களை உள்ளிடுவதற்கு தேடினால், திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளன. உடுமலை தொகுதியே இல்லை.
கோவை மாவட்டத்திலும் இல்லை. வாக்காளர் பட்டியலில் நமது பெயரை தேடுவதற்கான, 'சர்ச் யுவர் நேம் இன் வோட்டர்ஸ் லிஸ்ட்' வசதியில், விபரங்களை உள்ளிட்டு தேடும் போதும், உடுமலை சட்டசபை தொகுதியைக் காணவில்லை. block_P
அதெல்லாம் ஒன்றும் கிடையாது ஏழெட்டு கேள்விகள் மட்டும் தான் போட்டோ ஆதார் எண் தாய் பெயர் தந்தை பெயர் இருப்பிடம் அவ்வளவுதான்
சோழிங்கநல்லூர் தொகுதியையும் அது சார்ந்த செங்கல்பட்டு மாவட்டத்தையும் காணோம்
இப்படி ஒரு பெரிய தரவு முன்னெடுப்பு எடுக்கும் போது பிரச்சனைகள் வருவது இயற்கை. காலம் அதிகம் தேவைப்படும்.
தொழில்நுட்பங்கள் சரியான முறையில் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Let's Hope for the best Electoral Exercise.
அதற்க்கு உரிய கால அவகாசம் தந்து எடுக்கவேண்டுமல்லவா இவர்கள் தொடங்கியுள்ள தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கம் இவற்றில் பாஜகவின் எதிரிக்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்
இவை அனைத்திற்கும் தேர்தல் நடத்த 6 மாதங்கள் மட்டுமே உள்ளது ஏன் இந்த அவசரம் ஒரு ஆண்டு மற்றும் அதற்க்கு மேல் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் தொடங்கவில்லை ????
The dialled number doesnt exit. This is what I got when dialled the number 8065420020.
பொது மக்களுக்கு எந்த இடையூறுமில்லாமல் உண்மை தன்மையுடன் நடைபெறவேண்டும். அரசாங்க ஊழியர்கள் அதற்கு துணை நிற்க வேண்டும் என்பதே கோரிக்கை.மேலும்
-
நலம் காக்கும் ஸ்டாலின் நரிப்பள்ளியில் முகாம்
-
பயணிகள் நிழற்கூடம் இடிப்பு: மக்கள் மறியல்
-
குளத்தில் மூழ்கி பெண் குழந்தை பலி
-
'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
-
.செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில தடகள போட்டியில் சாதனை
-
ஒரே நாளில் 33,240 டன் ஏற்றுமதி சென்னை துறைமுகம் சாதனை