கீற்றாக ஒரு மாற்றத்தின் காற்று


மேற்கு வங்காளத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி கிராமம் அமைதிக்குப் பெயர்போன பகுதி. ஆனால் சமீபத்தில் அங்கு நடந்த ஒரு நிகழ்வு சமூகப் புரட்சியாக மாறியுள்ளது. அந்த நிகழ்வு — ரியா சர்தார் மற்றும் ரகி நஸ்கர் என்ற ஒரு பாலினமான இரு இளம் பெண்களின் திருமணம்.

இருவரும் கல்வியறிவு பெற்றவர்கள்; பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், தொழில்முறை நடனக்கலைஞர்கள் சுயமாக சம்பாதிப்பவர்கள், சராசரியாக 20 வயதை தொட்டவர்கள், நகரப் பின்னணியில்லாதவர்கள் என்றாலும், இணையத்தின் மூலம் உலகில் நிகழும் சமூக மாற்றங்களைப் பற்றி விழிப்புணர்வு பெற்றவர்கள். இந்த விழிப்புணர்வே அவர்களை உறுதியாக்கியது.
Latest Tamil News
பல ஆண்டுகளாக தோழிகளாக இருந்த ரியா மற்றும் ரகி இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகும் முடிவை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தினர். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது — குறிப்பாக ரகியின் பெற்றோர் மனநிலை கடுமையாக இருந்தது. ஆனால் ரியாவின் உறுதியும், கிராம மக்கள் சிலரின் ஆதரவும், அக்கம்பக்க மகளிரின் ஊக்கமும் காரணமாக இறுதியில் தங்கள் திருமணத்தை கிராமத்திலேயே நடத்த முடித்தனர்.

இந்த திருமணம் சட்டரீதியிலான திருமணமுமல்ல காரணம் இன்னும் இந்தியாவில் ஒரே பாலினத்தவர்களின் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை ஆனால் ஒரே பாலினத்தவரின் அன்பும் நட்பும் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்ற அளவில் சட்டம் சொல்லியுள்ளது.

இப்படி சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் கிராம மக்கள் பூர்வீக வழக்கப்படி இவர்களை 'மணப்பெண்கள்' என ஏற்றுக்கொண்டனர். மலர் மாலைகள், தீபங்கள், பாரம்பரிய சடங்குகள் என அனைத்தும் இடம்பெற்றன. இது அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான அங்கீகாரம் மட்டுமல்ல, சமூகத்தில் தங்களுக்கான இடம் இருப்பதை உணர்த்திய நிகழ்வும் ஆகும்.இளம் தலைமுறையினரின் மனநிலையும் சமூக ஊடகங்களில் எழுந்த ஆதரவும் இந்த நிகழ்வை வித்தியாசமாக மாற்றியுள்ளது.

முன்னொரு காலத்தில் இது “வெறுப்பு” அல்லது “அவமானம்” எனக் கருதப்பட்டிருக்கலாம். இன்று, சில கிராம மக்கள் இதை “இருவரின் விருப்பம்” என ஏற்றுக் கொள்கிறார்கள்.அது முழுமையான ஒப்புதல் அல்ல; ஆனால் அனுதாபமும் புரிதலும் உருவாகத் தொடங்கியுள்ளது.

சமூக மாற்றம் பெரும்பாலும் நகரங்களிலிருந்து அல்ல, மனித இதயங்களில் இருந்து ஆரம்பிக்கிறது.
கல்தலி கிராமத்தில் நடந்த இந்த நிகழ்வு அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு


இருவரும் தற்போது தங்கள் வாழ்வைத் தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் சமூகச் சேவையில் ஈடுபட்டு, “எங்கள் போன்றவர்கள் பயப்படாமல் தங்கள் உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டும்” என்பது இவர்களின் நோக்கம்.

இந்திய சமூகத்தின் மத, குடும்ப, பாரம்பரிய அடிப்படைகள் மிக வலிமையானவை. ஆனால் அவற்றுள் மனித நேயம் ஊடுருவத் தொடங்கியுள்ளது.“இது என் வாழ்க்கை, என் தேர்வு” என்ற சிந்தனை இன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இது ஒரு புரட்சியின் தொடக்கம் அல்ல; ஆனால், ஒரு புதிய மரியாதையின் மெல்லிய நிழல் — அது ஒருநாள் சட்டத்தையும் தொடும்.

இந்த நிகழ்வு இந்தியாவின் சிறிய கிராமங்களுக்கே கூட மாற்றத்தின் காற்று கீற்றாக நுழைந்துவிட்டதை நிரூபிக்கிறது. அது சட்டம் மாறியதால் அல்ல — சமூக மனநிலை மாற ஆரம்பித்ததால்.

-எல்.முருகராஜ்

Advertisement