இடுக்கி அணையை நடந்தபடி ரசிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி அணையை நடந்து சென்று ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி யளிக்கப்பட்டது.

இந்த அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கது. மின்வாரிய கட்டுப் பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கோடை சீசனில் மட்டுமே அணையை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர்.

ஓணப்பண்டிகையையொட்டி செப்.,1 முதல் செப்.,30 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு நவ., 30 வரை அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது. அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டது என்பதால் பயணிகள் நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டு ஹைடல் டூரிஸம் சார் பிலான பேட்டரி கார்களில் அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் தலையீட்டால் அணையை பயணிகள் நடந்து சென்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நடை முறையை ரோஷி அகஸ்டின் டிக்கெட் வழங்கி துவக்கிவைத்தார்.

பராமரிப்பு பணி களுக்காக புதன்கிழமை தோறும் பயணிகளுக்கு அனுமதி இல்லை. பிற நாட்களில் தினமும் 3750 பேர் அணையை காண அனுமதிக்கப்படுவர். அதில் 2500 பேர் நடந்தும், 1250 பேர் பேட்டரி காரிலும் செல்ல ஆன்லைன் வாயிலாக டிக்கெட் வினியோகப்படுகிறது. முன்பதிவை பொறுத்து நேரடியாகவும் டிக்கெட் வழங்கப்படும்.

கட்டணம் என்ன நடந்து செல்ல நபர் ஒன்றுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.30, பேட்டரி காரில் நபர் ஒன்றுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.100 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. www.keralahydeltourism.com இணைய தளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். காலை 10:00 முதல் மதியம் 3:30 மணி வரை அணையை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

Advertisement