இந்தியா 'ஏ' ரன் குவிப்பு: துருவ் ஜுரெல் மீண்டும் சதம்
பெங்களூரு: துருவ் ஜுரெல் சதம் விளாச, இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 382 ரன் குவித்தது.
இந்தியா 'ஏ', தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிகள் விளையாடும் அதிகாரப்பூர்வமற்ற 2வது டெஸ்ட் பெங்களூருவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 255, தென் ஆப்ரிக்கா 'ஏ' 221 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 78/3 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணிக்கு ராகுல் (27), குல்தீப் யாதவ் (16) சோபிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் ரிஷாப் பன்ட், 17 ரன் எடுத்திருந்த போது 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார். பின் இணைந்த துருவ் ஜுரெல், ஹர்ஷ் துபே ஜோடி நம்பிக்கை தந்தது. அபாரமாக ஆடிய ஜுரெல் மீண்டும் சதம் விளாசினார். ஏற்கனவே முதல் இன்னிங்சில் 132* ரன் எடுத்திருந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஹர்ஷ் துபே அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 184 ரன் சேர்த்த போது ஹர்ஷ் துபே (84) அவுட்டானார்.
மீண்டும் களமிறங்கிய ரிஷாப் பன்ட் (65), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 382/7 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஜுரெல் (127) அவுட்டாகாமல் இருந்தார்.
பின், 417 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, ஆட்டநேர முடிவில் 25/0 ரன் எடுத்திருந்தது.
ரிஷாப் பன்ட் காயம்
தென் ஆப்ரிக்கா 'ஏ' வேகப்பந்துவீச்சாளர் டிஷெபோ மொராகி வீசிய பந்து, இந்திய கேப்டன் ரிஷாப் பன்ட் மீது 3 முறை ('ஹெல்மெட்', முழங்கை, அடிவயிறு) தாக்கியது. வலியால் துடித்த பன்ட், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். பின் பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் மீண்டும் 'பேட்' செய்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் காலில் காயமடைந்த பன்ட், 3 மாதம் ஓய்வில் இருந்தார். அடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இவர், காயம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் நல்லது.