அபிஷேக் 'ஆயிரம்' அதிசயம்: கோப்பை வென்றது இந்தியா
பிரிஸ்பேன்: ஐந்தாவது 'டி-20' போட்டி மழையால் பாதியில் ரத்தாக, இந்திய அணி தொடரை 2-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது. அபிஷேக் சர்மா அதிவேகமாக 1000 ரன் எட்டி அசத்தினார்.
ஆஸ்திரேலியா சென்ற சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 3, 4வது சவாலில் வென்ற இந்தியா, 2-1 என முன்னிலை பெற்றது.
ஐந்தாவது போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இந்திய அணியில் திலக் வர்மாவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட, ரிங்கு சிங் வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சுப்மன் விளாசல்: இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில் அதிரடி துவக்கம் தந்தனர். டிவார்ஷியஸ் ஓவரில் (3வது) சுப்மன் 4 பவுண்டரி விளாச, 16 ரன் கிடைத்தன. மறுபக்கம் எல்லிஸ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் அபிஷேக். இந்திய அணி 4.5 ஓவரில் 52/0 ரன் எடுத்திருந்த போது இடி, மின்னலுடன் மழை குறுக்கிட்டது. ஆட்டம் நிறுத்தப்பட்டது.
நாயகன் அபிஷேக்: மழை தொடரவே, போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. அபிஷேக் (23 ரன், 13 பந்து, 1x4, 1x6), சுப்மன் (29 ரன், 16 பந்து, 6x4) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி தொடரை 2-1 என வென்றது. தொடர் நாயகன் விருதை அபிஷேக் சர்மா (5 போட்டி, 163 ரன்) தட்டிச் சென்றார்.
அதிவேக ரன் மழை
* தனது 11வது ரன் எடுத்த போது, சர்வதேச 'டி-20' அரங்கில் அதிவேகமாக 1000 ரன் (பந்து அடிப்படையில்) எட்டி சாதனை படைத்தார் இந்தியாவின் அபிஷேக் சர்மா (528 பந்து). அடுத்த இடத்தில் சக வீரர் சூர்யகுமார் யாதவ் (573 பந்து), பில் சால்ட் (இங்கி., 599 பந்து) உள்ளனர். அபிஷேக் இதுவரை 29 'டி-20' போட்டியில் 1012 ரன் (சராசரி 37.48, ஸ்டிரைக் ரேட் 189.51) எடுத்துள்ளார்.
* சர்வதேச 'டி-20' அரங்கில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன் எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார் அபிஷேக் (28 இன்னிங்ஸ்). முதலிடத்தில் கோலி (27 இன்னிங்ஸ்) உள்ளார்.
தொடரும் வெற்றிநடை
* ஆஸ்திரேலிய மண்ணில் 13 ஆண்டுகளாக இரு தரப்பு 'டி-20' தொடரில் இந்தியாவை அசைக்க முடியவில்லை. 2012ல் இருந்து பங்கேற்ற 5 தொடரில் 3ல் வெற்றி, 2ல் 'டிரா' செய்துள்ளது.
* இந்திய அணி தொடர்ந்து 7வது இரு தரப்பு 'டி-20' தொடரை வென்றது. ஆப்கானிஸ்தான் (3-0, 2024), ஜிம்பாப்வே (4-1, 2024), இலங்கை (3-0, 2024), வங்கதேசம் (3-0, 2024), தென் ஆப்ரிக்கா (3-1), இங்கிலாந்து (4-1, 2025), ஆஸ்திரேலியாவை (2-1, 2025) வீழ்த்தியது.