கிண்டலுக்கு குறைச்சல் இல்லை!

'மந்தமாக இருந்த பீஹார் தேர்தல் களத்தை, தன் பேச்சால் கலகலப்பாக்கி விட்டார்...' என, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான, லாலு பிரசாத் யாதவ் பற்றி பேசுகின்றனர், பிற கட்சி அரசியல்வாதிகள்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட ஓட்டுப்பதிவு, வரும் 11ல் நடக்க உள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு, 77 வயதாகி விட்டது. இவர், அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில், எதிர்க்கட்சியினரை கிண்டலாகவும், நையாண்டியாகவும் பேசுவார்.

இவரது நகைச்சுவை பேச்சு, அப்போது மிகவும் பிரபலம். தற்போது வயதாகி விட்டதால், தன் மகன் தேஜஸ்வி யாதவிடம் கட்சி பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த பிரசாரத்தில், அவர் பேசும்போது, 'சப்பாத்தி சுடும்போது திருப்பி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; இல்லை என்றால், கருகி விடும். அதேபோல, பீஹாரிலும் ஆட்சியை மாற்ற வேண்டும். நிதிஷ் குமாரை, 20 ஆண்டுகள் ஆள விட்டதே அதிகம். அடுத்து, தேஜஸ்வி ஆட்சி வரவேண்டும்...' என்றார்.

இதைக்கேட்ட எதிர்க்கட்சியினர், 'லாலுவுக்கு வயதாகி விட்டாலும், அவரது கிண்டல் பேச்சு மட்டும் குறையவில்லை...' என்கின்றனர்.

Advertisement